Sundar C: சுந்தர்.சி பெயருக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? - இந்த கதை தெரியுமா?
முறை மாமன் படத்தின் டைட்டில் கார்டில் சுந்தர்.சி என போட்டு விட்டார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்க்கும்போது எனக்கு ஷாக்காக இருந்தது. ஆனால் அதனை திருத்தம் செய்ய முடியாமல் போனது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் சுந்தர் சி தனது பெயருக்கான காரணம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது பற்றிக் காணலாம்.
சிறந்த கமர்ஷியல் இயக்குநர்
இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னாளில் முறை மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, ஜானகிராமன், அருணாச்சலம், உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, கிரி, அன்பே சிவம், தகதிமிதா, வின்னர், சின்னா, ரெண்டு, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை சீரிஸ் படங்கள் என 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
நடிகராக தலைநகரம் படம் மூலம் எண்ட்ரீ கொடுத்த அவர் வீராப்பு, சண்ட, தீ, வாடா, ஆயுதம் செய்வோம், ஐந்தாம் படை, குரு சிஷ்யன், முரட்டு காளை, நகரம் மறுபக்கம், தலைநகரம் 2, இருட்டு, பட்டாம்பூச்சி என பல படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி படம்
இந்த நிலையில் சுந்தர் சி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். 2027ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகள் கழித்து ரஜினி - சுந்தர் சி கூட்டணி இணையவுள்ளதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தர் சி பற்றிய செய்திகளை ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக தேடி வருகின்றனர்.
நான் ஒரு பெரிய சோம்பேறி
இதனிடையே முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய “சுந்தர்.சி” பெயருக்கான காரணம் பற்றி அவர் கூறியிருந்தார். அதாவது, “நான் அடிப்படையில் மிகப்பெரிய சோம்பேறி. என்னுடைய பெயரை சி.சுந்தர் என எழுத சோம்பேறியாக இருக்கும். அதனால் கையெழுத்து போட சொன்னால் சுந்தர் சி என இடுவேன். இதனை என்னுடைய உதவி இயக்குநர்களாக இருந்த செல்வ பாரதி, சுராஜ், பிரபு சாலமன் ஆகியோர் ஒரு விஷயம் செய்தார்கள்.
அதாவது முறை மாமன் படத்தின் டைட்டில் கார்டில் சுந்தர்.சி என போட்டு விட்டார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்க்கும்போது எனக்கு ஷாக்காக இருந்தது. ஆனால் அதனை திருத்தம் செய்ய முடியாமல் போனதால் சுந்தர்.சி என்ற பெயருடம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதன்பிறகு இரண்டாவதாக முறை மாப்பிள்ளை படத்தின் டைட்டில் கார்டில் சி.சுந்தர் என போட்டேன். அப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.
அதனால் எனக்கே மனதிற்குள் பெயரை மாற்றியது தான் காரணம் என தோன்றி விட்டது. இருந்தாலும் சந்தேகத்துடன் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் சுந்தர்.சி என போட்டேன். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது” என சுந்தர்.சி தெரிவித்திருந்தார்.





















