
Sun Tv Serial : எண்டு கார்டு போடப்படும் சன் டிவி சீரியல்கள்... புதிய சீரியல்களின் வருகைதான் காரணமா?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் மற்றும் கண்ணான கண்ணே சீரியல்கள் முடிவுக்கு வருகிறது. அந்த நேரங்களில் மலர் மற்றும் மிஸ்டர் மனைவி என்ற இரு புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளது.

ரசிகர்களின் மனங்களில் பல ஆண்டு காலமாக அசைக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்தது சன் டிவி. காலை முதல் இரவு வரை ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் சீரியல்களின் பங்கு ஏராளம். சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்ற பல சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி டிஆர்பி ரேட்டிங் எகிறும் இரு தொடர்கள் அபியும் நானும் மற்றும் கண்ணான கண்ணே.
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த இரு தொடர்களுக்கு திடீரென எண்டு கார்டு போட முடிவெடுத்துள்ளது சன் தொலைக்காட்சி என்ற தகவல் தற்போது பரவி வருகிறது. இந்த இரண்டு தொடர்களும் முடிவடைவதால் அதற்கு பதிலாக இரண்டு புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் கூறுகிறது. மலர் மற்றும் மிஸ்டர் மனைவி உள்ளிட்ட தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது.
ப்ரீத்தி ஷர்மா நடிக்கும் மலர் சீரியல் :
சித்தி 2 சீரியல் மூலம் சன் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி ஷர்மா - இந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியல் 'மலர்'. புத்திசாலியான, தைரியமான பெண்ணாக மலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ப்ரீத்தி ஷர்மா. மேலும் இந்த தொடரில் நிவிஷா, அக்னி மற்றும் ரெஜினா துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சாந்த்வானத்தின் ரீ மேக் சீரியலாகும். சமீபத்தில் தான் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானா ஷாஜஹான்:
சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றுமொரு புதிய சீரியல் 'மிஸ்டர் மனைவி'. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமான ஷபானா ஷாஜஹான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகிறார் பவன் ரவீந்திரா. தெலுங்கு தொடர்களில் பிரபலமான இவர் தற்போது தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். மாறுபட்ட குணங்கள் கொண்ட இருவர் காதலால் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் சம்பவங்கள்தான் சீரியலின் மைய கதை. இதன் ப்ரோமோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
புதிய சீரியல்கான வரவேற்பு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் மிகவும் அபிமான தொடர்களான அபியும் நானும் மற்றும் கண்ணான கண்ணே தொடர்கள் முடிவுக்கு வருவது வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்த இரு புதிய சீரியல்களின் வருகையால் திடீரெனெ பிரபலமான சீரியல்கள் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

