Suriya : நடிகர் சூர்யா மீது கடும் நடவடிக்கை கூடாது - ஜெய்பீம் விவகாரத்தில் கோர்ட் உத்தரவு
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தியதாக கூறி அந்தப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வன்னியர் சேனா அமைப்பு புகார் அளித்தது. இந்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சூர்யா, ஞானவேல் ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது என்று கூறி, வழக்கை வரும் ஜுலை 21 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
பிரச்னையும் நீதிமன்ற உத்தரவும் - முழு விவரம்
முன்னதாக, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அத்துடன் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது.
View this post on Instagram
குறிப்பாக படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் குறியீடு காலண்டரில் இடம் பெற்றிருந்ததாகவும், அந்த சமுதாயத்தின் தலைவர்களில் ஒருவர் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியதோடு, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, மற்றும் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வன்னியர் சேனா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தப்புகாரை விசாரித்த நீதிமன்றம், சூர்யா உள்ளிடோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சூர்யா, ஞானவேல் ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்தப்புகார் வருவதற்கு முன்னரே, படத்தில் இருந்து அது தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனிடையே வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதையும் சேர்ந்து விசாரிக்க வேண்டுமென்று புகார்தாரர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார் சூர்யா ஞானவேல் ஆகியோருக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கூறி, வழக்கை வரும் ஜுலை 21 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.