Sruthi Shanmugapriya: நீ இல்லாத இந்த ஒரு மாதம்.. மறைந்த கணவர் பற்றி ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கமான பதிவு!
சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தனது கணவர் இறந்து ஒரு மாதம் ஆன நாளில் உருக்கமான போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவியில் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரியலான 'நாதஸ்வரம்' தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அதைத் தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப்பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் தான் திருமணம் நடைபெற்றது. ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் கடந்த மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஒரே ஆண்டில் கணவரை இழந்ததில் சுக்கு நூறாக உடைந்து போனார் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
அரவிந்த் உயிர் இழந்ததை பற்றி சோசியல் மீடியாவில் பல வதந்திகள் பரவி வந்த நிலையில் தனது கணவர் இறப்பு குறித்து அவதூறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ஸ்ருதி தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கணவரின் நினைவாக அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அவரின் நினைவுகளை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து வருகிறார்.
ஸ்ருதியின் போஸ்ட் :
அந்த வகையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் இறந்து ஒரு மாதம் ஓடியதை நினைத்து மிகவும் எமோஷனலான போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"ஒரு உருவமாக இந்த ஒரு மாத காலமாக நீங்கள் இல்லாமல் நான் உடைந்து நொறுங்கி வழியில் மூழ்கும் போதெல்லாம் உங்களுடைய ஆன்மா என் மீது அன்பையும் வலிமையையும் பொழிகிறது. என்னைச் சுற்றி நீங்கள் இருப்பதை நான் எப்படி உணர்கிறேன் என்பதை யாரிடத்திலும் விளக்க முடியாது. நாம் இருவரும் ஆத்மார்தமான நண்பர்கள் என்பதால் நம்மால் மட்டுமே அதை உணர முடியும்.
நீங்கள் என்றுமே என்னுடைய பாதுகாவலராக என்னுடைய ஏஞ்சலாக இருப்பீர்கள் என்பதை நான் மனமார நம்புகிறேன். எனது இறுதி மூச்சு உள்ள வரையில் நான் உங்களின் அழகான நினைவுகளை காதலோடு சுமந்து கொண்டு இருப்பேன். லவ் யூ அரவிந்த்!" என உருக்கமான ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.
ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி :
மேலும் அவர்களுக்கு ஆறுதலாகவும் அக்கறையோடும் இருக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றிகளையும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். தன்னை சுற்றிலும் இப்படிப்பட்ட நல்ல இதயங்கள் கிடைப்பதற்கு தான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், அனைவரின் பிராத்தனைகளுக்கும் நன்றிகள் என்றும் கூறியுள்ளார்.
உங்களைப் போன்றவர்கள் இல்லாமல் இந்த கடினமான கட்டத்தில் இருந்து வெளியே வந்து இருக்க முடியாது என தனது ரசிகர்களுக்கும், ஆறுதலாக ஆதரவாக இருப்பவர்களும் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ருதி சண்முகப்பிரியா. ஸ்ருதியின் இந்த எமோஷனலான போஸ்டுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதலான வார்த்தைகளை கூறி வருகிறார்கள்.