Leo : லியோ திரைப்படத்தை இலங்கையில் வெளியிடுவதில் பிரச்சனை...தமிழ் எம்.பிக்கள் விஜய்க்கு கடிதம்
லியோ திரைப்படத்தை இலங்கையில் வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்.பிக்கள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்கள்
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன் , சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
வசூலை அள்ளும் லியோ
லியோ திரைப்படத்தில் மீது உலலம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது. இதுவரை லியோ திரைப்படத்திற்கு மொத்தம் ரூ.70 கோடி வரை டிக்கெட் விற்பனை ஆகியுள்ளதாக இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னிக் அறிவித்துள்ளது. லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாளில் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் மறுபக்கம் பலவிதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது லியோ .
சிறப்புக் காட்சிகள்
லியோ திரைப்படம் வெளியாகும் நாட்கள், நெருங்கும் தருவாயில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. முதலில் படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசிடம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது. இதன்படி அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 7 மணி காட்சிகளுக்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் முதல் காட்சி காலை 9 மணியளவில் தொடங்கப்படும் என இறுதி முடிவானது. மேலும் இந்த குழப்பத்தினால் பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவுகள் திறக்க தாமதமானதால் ரசிகர்கள் எரிச்சலடைந்தார்கள்.
ஆந்திராவில் லியோவிற்கு தடை
இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் லியோ திரைப்படத்தை 20-ஆம் தேதிக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என புதிய சர்ச்சை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து நாளை அக்டோபர் 19-ஆம் தேதி லியோ திரைப்படத்தின் காட்சிகள் அதிகாலை நான்கு மணி முதல் திரையிடப்பட இருக்கிறது. அதே நேரத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்துள்ள டைகர் நாகேஷ்வர ராவ் மற்றும் பாலையா நடித்த பகவந்த் கேசரி ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையிலும் லியோ திரைப்படம் முன்பதிவுகள் 4 கோடி வசூல் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் வெளியிட வேண்டாம்
இந்நிலையில் லியோ திரைப்படம் இலங்கையில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தை நாளை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்.பி க்கள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அன்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி அவர்களை ஆதரித்து போராட்டம் நடைபெற இருப்பதாகவும் லியோ திரைப்படம் வெளியிடப்பட்டால் அது அந்த போராட்டத்தை பாதிக்கும் என அவர்கள் கருதுவதால் விஜயிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.
மறுபுறம் லியோ திரைப்படத்தை பார்க்க இலங்கையில் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒரு சில திரையரங்குகளில் முன்பதிவுகள் தொடங்கிய சிறிது நேரத்திற்குள்ளாக டிக்கெட்கள் விற்று தீர்ந்திருக்கின்றன. இதன் காரணத்தில் தமிழ் எம்.பி க்களின் கோரிக்கைக்கு சாத்தியங்கள் குறைவுதான்.