சூரியின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த மண்டாடி! முதல் நாள் வசூல் நிலவரம்
நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.6.55 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் அதிக வசூலுடன் தொடங்கிய படமாக மண்டாடி அமைந்துள்ளது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான மண்டாடி திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், மிதுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
மண்டாடி முதல் நாள் வசூல்
முதல் நாளில் இந்திய அளவில் மண்டாடி திரைப்படம் ரூ.4.75 கோடி வசூலித்துள்ளது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்து உலகளவில் ரூ.6.55 கோடி வசூல் கிடைத்துள்ளது. Sacnilk தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வசூல் கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இதே நாளில் திரையரங்குகளில் வெளியான கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரூ.4.50 கோடி வசூலித்துள்ளது. சூரியின் மண்டாடி அதைவிட அதிக வசூலை பதிவு செய்துள்ளது. மேலும், சூரி நடித்த படங்களின் முதல் நாள் வசூலில் இதுவே அதிகபட்ச வசூல். ரூ.90 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக குறிப்பிடப்படும் ‘சர்தார் 2’ படத்துடன் நேரடியாக வெளியான மண்டாடி, முதல் நாள் வசூலில் முன்னிலை பெற்றுள்ளது.
சூரியின் வளர்ச்சி
காமெடி நடிகராக திரையுலகில் அறிமுகமான சூரி, ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பாதையை தொடங்கினார். தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை 2’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். அந்த வரிசையில் தற்போது மண்டாடி படமும் அவரது திரைப்பயணத்தில் சேர்ந்துள்ளது.
பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள மண்டாடியில் சூரி நடித்துள்ளார். படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் கனிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியின் அடுத்த படம்
தொடர் வெற்றிகளை கொத்து வரும் சூரியின் மார்கெட்டும் கனிசமாக உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக சூரி ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது. ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்துக்காக சூரிக்கு மட்டும் சுமார் ரூ.25 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















