மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
இந்திய அளவில் மறுவெளியீட்டில் சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா படம் அதிக நாட்கள் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாய திரைப்படம் மறுவெளியீட்டில் இந்திய அளவில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
காதலர்களின் ஃபேவரைட்
கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’விண்ணைத் தாண்டி வருவாயா’. இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இன்றளவும் பல காதலர்களின் ஃபேவரைட் படமாக இப்படம் திகழ்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசை
இந்த படத்தின் வெற்றிக்கு ஒர் முக்கிய காரணம் என்றால் அது ஏ.ஆர்.ரகுமானின் இசை என்று சொல்லலாம். அவர் இசையமைத்த பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்தை மேலும் மெருகேற்றியது. மலையாள தேசத்தின் அழகியலை காட்சிப்படுத்தும் காட்சிகளில் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை நன்கு பொருந்தி போனது.
ரசிகர்களை கவர்ந்த ஜோடி
தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷான ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான சிம்பு இப்படத்தில் ஆரவாரமின்றி நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல், ஜெஸ்ஸி என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு குழப்பபான மனநிலை கொண்ட பெண்ணாக நடித்த திரிஷா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிம்பு - திரிஷா இடையேயான காதல் காட்சிகள் அனைத்தும் வெகு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அனைத்து காதலர்களுக்கும் ஃபேவரைட் ஆகவே அமைந்து போனது.
சிம்பு - திரிஷா கூட்டணி
சிம்பு, திரிஷா ஆகிய இருவரின் சினிமா பயணத்திலும் இத்திரைப்படம் ஒரு கிளாசிக் படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு திரிஷாவை ரசிக்காத இளைஞர்களே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. ஏனென்றால், ஜெஸ்ஸி கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது அவ்வளவு அதிகம். அதேபோல் கார்த்திக் கதாப்பாத்திரத்தில் படம் முழுவதும் காதல் நாயகனாக அசத்திய சிம்பு, பெண் ரசிகைகளின் மனதை கொள்ளையடித்தார்.
இந்திய அளவில் சாதனை
சென்னை PVR அண்ணா நகர் திரையரங்கில் கடந்த 2021ஆம் ஆண்டு இத்திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. 11 ஆண்டுகள் கழித்து வெளியான பிறகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது சுமார் 1700 நாட்களை கடந்து இத்திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், இந்திய அளவில் மறுவெளியீட்டில் 1500 நாட்களை கடந்த படம் என்ற சாதனையை ‘விண்ணை தாண்டி வருவாயா’ படைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















