(Source: ECI/ABP News/ABP Majha)
Samantha: ’சிகிச்சை எடுக்க 25 கோடி ரூபா வாங்குனேனா?’ : பொறுப்பா பேசுங்க.. சமந்தா கொடுத்த பளார் பதில்..
தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மயோசிட்டிஸ் நோய்க்கான ஹைபர்பேரிக் சிகிச்சையை சமந்தா எடுத்துக்கொண்டார்.
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் சுமார் ஓராண்டு காலமாக அவதிப்பட்டு வருகிறார். மயோசிட்டிஸ் நோயால் உடலின் தசைகள் பலவீனமாகவும் சோர்வாகவும் மாறும். இதற்காக ஹைபர்பேரிக் சிகிச்சையை எடுத்துக்கொண்டார். இந்த சிகிச்சைக்காக சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரிடம் ரூ.25 கோடிகள் வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
நேற்று முழுவதும் இந்தச் செய்தி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து தற்போது பதிவிட்டுள்ளார். தன் ஸ்டோரியில் “மயோசிட்டிஸ் நோய்க்கு சிகிச்சைக்கு ரூபாய் 25 கோடியா? யாரோ உங்களுக்கு தவறான தகவலைக் கொடுத்துள்ளனர். நான் சினிமாவில் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு சிறு தொகையை என்னுடைய சிகிச்சைக்காக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி.
நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. நானே திரைத்துறையில் நன்றாக சம்பாதித்துள்ளேன். மேலும், மயோசிட்டிஸ் என்பது ஒரு நிலை, அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே மயோசிடிஸ் சிகிச்சை குறித்து செய்திகள் வெளியிடும்போது மிகவும் கவனமாகவும் சரியான செய்தியையும் வெளியிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை
மயோசிட்டிஸ் நோய்க்கான சிகிச்சையான ஹைபர்பேரிக் ஆக்சிஜன் சிகிச்சை (HBOT) என்பது ஒரு நபர் தூய ஆக்ஸிஜனை சுவாசிக்க வேண்டிய சிகிச்சையாகும். இதைச் செய்ய, சிகிச்சை எடுத்துக்கொள்பவர் ஒரு சிறப்பு அறையில் வைக்கப்படுவார்கள். இந்த சிறப்பு அறை ஹைபர்பேரிக் அறை என்று அழைக்கப்படுகிறது.
ஹைபர்பரிக் ஆக்சிஜன் சிகிச்சை அறையில் காற்றழுத்தம் வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். சாதாரண காற்றழுத்தத்தில் தூய ஆக்சிஜனை உள்ளிழுக்கும்போது ஒரு தனிநபரின் நுரையீரல் இந்த சூழ்நிலைகளில் அதிக ஆக்ஸிஜனை உறிஞ்சும்.
ஒவ்வொரு ஹைபர்பேரிக் சிகிச்சையும் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். சிகிச்சையின் வகையானது, ஒரு நபர் சிகிச்சையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது, அதாவது, சிகிச்சையின் போது அவர் உட்கார்ந்திருப்பாரா, அல்லது படுத்துக்கொள்கிறாரா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.
ஒரு நபருக்கு சிகிச்சை மீண்டும் செய்யப்பட வேண்டும் என்றால், அது அவரது உடல் நிலையைப் பொறுத்தது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து நோயை சிகிச்சை குணப்படுத்த உதவுகிறது. சிகிச்சையானது நோயெதிர்ப்பு அமைப்பு பாக்டீரியாவை எதிர்த்து ஸ்டெம் செல்களை உருவாக்க உதவுகிறது. இது பயனுள்ளதாக இருந்தாலும், இந்த சிகிச்சை அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல எனவும் கூறப்படுகிறது.
தவறான மற்றும் பொருத்தமற்ற முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டால், இந்த ஆக்ஸிஜன் சிகிச்சை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த சிகிச்சையானது அதிக அழுத்தத்தில் நடைபெறுகிறது.
இவ்வளவு ரிஸ்க் இருக்கும் சிகிச்சையை நடிகை சமந்தா எடுத்து வருவதால், அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர். பலர் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும்” என வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.