Randeep Hooda: சாவர்க்கர் கேரக்டருக்காக ஐ விக்ரம்போல் உடல் இளைத்த ரந்தீப் ஹூடா!
Randeep Hooda: சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள சாவர்க்கர் படத்திற்காக உடல் எடையை குறைத்து மெலிந்து காணப்படும் போட்டோ ஒன்றை ரந்தீப் ஹூடா பகிர்ந்துள்ளார்
சுதந்திர போராட்ட தியாகி சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்'. இந்த போராட்ட தியாகியின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் ரன்தீப் ஹூடா. அவருடன் இணைந்து அங்கிதா லோகண்டே மற்றும் அமித் சியால் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்தி மற்றும் மராத்தி என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ் ரூபா பண்டிட், சாம் கான், அன்வர் அலி மற்றும் பாஞ்சாலி சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் பரபரப்பான டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மார்ச் 22ம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா 2001ம் ஆண்டு வெளியான 'மான்சூன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. அதை தொடர்ந்து ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை, ஆலியா பட் உடன் இணைந்து நடித்த இம்தியாஸ் அலியின் ஹைவே, ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் இணைந்து சர்ப்ஜித், கரண் ஜோஹரின் பாம்பே டாக்கீஸ், சாஹேப் பிவி ஆர் கேங்ஸ்டர், ரங் ரஸியா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஓடிடியில் வெளியான 'எக்ஸ்ட்ராக்சன்' திரைப்படத்தில் ஒரு முக்கியமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மணிப்புரி நடிகையும் பிரபல மாடலுமான லின் லைஷ்ராம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மணிப்பூர் பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ பிரமாண்டமாக நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் விரலாக பகிரப்பட்டன.
இந்த வரலாற்று படைப்பான 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்' படத்திற்காக நடிகர் ரன்தீப் ஹூடா தன்னுடைய உடல் தோற்றத்தை மிகுந்த சிரத்தையோடு மாற்றியுள்ளார். அதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் மோனோக்ரோம் மிரர் புகைப்படம் மூலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒல்லியான உடல் தேகத்துடன் பெரிய சைஸ் ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்திருந்தார். "காலா பானி" என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்துள்ள இந்த போஸ்ட் பார்த்த அவரின் ரசிகர்கள் ரந்தீப் ஹூடாவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.