Annaatthe: பொறுப்பற்ற ஊராட்சி தலைவரா ரஜினிகாந்த்? கதை என்றாலும் சுயநலம் ஏன்?
அப்படியிருக்க அதைவிட தன் தங்கை தான் பெரிது என சென்ற காளையன், கட்டாயம் ஒரு சுயநலவாதியே!
அண்ணாத்த படம் வந்த பொழுதே இதை எழுதலாம் என்று தோன்றியது. ஆனால், படம் நன்றாக இருக்கிறதா... நன்றாக இல்லையா என்கிற போட்டா போட்டி நடந்து கொண்டிருந்த நேரம் என்பதால், அந்த நேரத்தில் இது எடுபடாமல் போகலாம் என்பதால், காத்திருந்து எழுத நேர்ந்தது. இது ரஜினியின் அரசியல் சார்ந்த பதிவு.
ரஜினி அரசியலுக்கு வருவார்... வருவார்... காத்திருந்து காலங்கள் கடந்து அது இல்லை என முடிவானது. கடைசி முனை வரை வந்து, முடிவை மாற்றிய ரஜினியின் எண்ணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட முடிவு. இப்போது படத்திற்கு வருவோம்... அவரது முடிவிற்கு படத்திற்கு என்ன சம்மந்தம்...? இருக்கிறது... படத்தில் கதையின் படி காளையனாக வரும் ரஜினியின் வேலை, அவர் ஒரு ஊராட்சி தலைவர். அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதி.
இந்திய ஆட்சி நிர்வாகத்தில், மக்களோடு மக்களாய் பணியாற்றும் வாய்ப்பும், உரிமையும் கொண்ட ஒரே பதவி, ஊராட்சி தலைவர் பதவி. ஆனால் படத்தில் ஊராட்சி தலைவராக ரஜினி என்ன செய்தார்... என்று பார்த்தால், ஒரு இடத்தில் கூட அதற்கான பதிவு இல்லை. ஓப்பனிங் பாடலில் ஒரு நொடி மட்டுமே அவர் ஊராட்சித் தலைவர் என காட்டுகிறா்கள்.
ஆனால், அவர் எந்த இடத்திலும் ஊராட்சி தலைவராக பணி செய்ததாக காட்டவில்லை. மாறாக, விஸ்வாசம் அஜித் ஒரு அரிசி மண்டி உரிமையாளர், அவர் அடிதடியில் இருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஊருக்காக, ஊர் நன்மைக்காக ஏதாவது ரஜினி செய்தாரா என்றால், அப்படி எந்த காட்சியும் அங்கு இல்லை. மாறாக அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனில் நிபந்தனை ஜாமின் கையெழுத்து போடவும், கோர்ட், கேஸ் என மட்டுமே ரஜினி வலம் வருகிறார்.
இதெல்லாம் இயக்குனர் மீது பழி போடும் விசயமல்ல. ரஜினி மாதிரியான பெரிய ஹீரோக்கள் ஒவ்வொரு காட்சியையும் முடிவு செய்பவர்கள். அரசியலின் அடிநாதம் வரை வந்து சென்ற ரஜினிக்கு, மக்கள் பணி மீதான எதிர்பார்ப்பு தெரியும். அப்படி இருக்க, அவர் பொதுநலம் மறந்து தன் தங்கை மட்டுமே உலகம் என்று வாழ்பவராக காட்டினால், வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற பொது நலம் இல்லையா? இத்தனை வழக்குகள் இருப்பவர், எப்படி ஊராட்சி தலைவர் ஆனார் என்கிற கேள்வியை லாஜிக் மறந்து மறைக்கலாம் என்றால், ஊராட்சி தலைவராவது உருப்படியாக பணி செய்திருக்க வேண்டும்; அதுவும் இல்லை.
அப்படியானால், பொறுப்பில்லாத ஊராட்சி தலைவர் காளையன் என்பது தான் சரியான கருத்து. தன் ஊராட்சி மக்களின் நலனை மறந்து, கொல்கத்தா வரை சென்று வில்லன்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அங்கு மக்களின் நிலை என்ன... ஊராட்சி பணிகளின் நிலை என்ன... ஊராட்சி தலைவர் கையெழுத்திடாமல் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது. ஊரில் இருந்த வரை தங்கச்சிக்காக வாழ்க்கை, தங்கச்சியே வாழ்க்கை என வாழ்க்கிறார். கொல்கத்தா சென்ற பின் தங்கச்சியை பாதுகாப்பதே வாழ்க்கை என வாழ்கிறார். அவரது செயல்பாடுகள் நல்ல அண்ணனுக்கு உரியது; ஆனால் நல்ல ஊராட்சி தலைவர் அல்ல! தன் தங்கை தான் பெரிது என சென்ற காளையன், கட்டாயம் ஒரு சுயநலவாதியே!