மம்மூட்டி படத்தின் காப்பியா ரஜினியின் கூலி ? ஒரே படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு இத்தனை அடியா!
ரஜினியின் கூலி திரைப்படம் மம்மூட்டி மலையாளத்தில் நடித்த கெளரவர் படத்தின் காப்பி என படத்தின் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான கூலி தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இப்படத்தை விமர்சித்தாலும் வசூல் ரீதியாக கூலி வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் கூலி படம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த படத்தின் காப்பி என புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மம்மூட்டி படத்தின் காப்பியா கூலி ?
கூலி திரைபடம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்து 1992 ஆம் ஆண்டு வெளியான 'கெளரவர்' படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களின் கதைக்கும் நிறைய ஒற்றுமைகளையும் நாம் பார்க்கலாம். கெளரவர் படத்தில் மம்மூட்டி ஒரு பெரிய கேங்ஸ்டர் கும்பலை எதிர்த்து சண்டை போடுவார். இதற்கிடையில் அவருக்கும் அவரது குடும்பத்திற்குமான உறவை இப்படத்தில் மிக சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. ரூ 1 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. மம்மூடி நடித்த சிறந்த படங்களில் ஒன்றாக கெளரவர் படம் ரசிகர்களால் கருதப்படுகிறது.
இப்படத்தின் கதையுடன் கூலி படத்திற்கு நிறைய தொடர்புகள் இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை தனது ஸ்டைலில் இயக்கியுள்ளார். கெளரவர் படம் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட படம் என்றால் கூலி பல விதமான எமோஷனை கதையில் இழுத்துப் போட்டு அதை சரியாக கையாளாமல் தொழில் நுட்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் என்று சொல்லலாம்.
ரஜினி தவிர்த்து இப்படத்தில் உபேந்திரா , செளபின் சாஹிர் , நாகர்ஜூனா , சத்யராஜ் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்கள் இருந்தும் படத்தில் அவர்கள் கதாபாத்திரங்கள் சரியாக கையாளப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசை மட்டுமே கூலி படத்தில் ரசிகர்கள் ரசித்த ஒரே அம்சமாக உள்ளது.
கூலி வசூல்
விமர்சனங்களுக்கு மத்தியிலும் கூலி திரைப்பட ரூ 500 கோடி வசூலை விரைவில் எட்ட இருக்கிறது. முதல் 4 நாட்களில் கூலி திரைப்பட உலகளவில் 404 கோடி வசூலித்ததாக படக்குழு தகவல் வெளியிட்டது. கூலி படத்தின் வசூல் தகவல்கள் பொய்யானவை என்கிற குற்றச்சாட்டையும் நெட்டிசன்ஸ் முன்வைத்து வருகிறார்கள்.





















