Quentin Tarantino: கைவிடப்பட்டதா ஹாலிவுட் ஜாம்பவான் டாரன்டினோவின் கடைசி படம் ..?
ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டாரன்டினோ இயக்கவிருந்த ’The movie Critic' படம் கைவிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
The movie Critic படத்திற்கு பிறகு திரைப்படங்கள் இயக்குவதை கைவிட இருப்பதாக டாரன்டினோ முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குவின்டின் டாரன்டினோ
ஹாலிவுட் படங்களில் கேங்ஸ்டர் கதை என்பது மிகவும் பிரபலமான ஒன்று. பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய காட்ஃபாதன் படம் தான் இன்றுவரை கேங்ஸ்டர் படங்களுக்கான முன்னோடியாக இருக்கிறது. தமிழில் நாயகனன், மலையாளத்தில் மாலிக் என காட்ஃபாதர் படத்தைத் தழுவி இன்றுவரை பல படங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன. இனிமேல் கேங்ஸ்டர் படத்தில் புதிதாக செய்வதற்கு எதுவும் இல்லை என்கிற நிலையில் தான் மார்டின் ஸ்கார்செஸி குட்ஃபெல்லாஸ் என்கிற படத்தை இயக்கினார். கேங்ஸ்டர்கள் என்றால் எப்போது இறுக்கமான முகத்துடன் சீரியஸாக பேசிக் கொண்டிருப்பார்கள் என்கிற பிம்பத்தை மாற்றிம் அவர்களை வாழ்க்கையில் இருக்கும் அபத்தங்கள் , சலிப்புகள் என புதிய கோணத்தை காட்டினார் மார்டின் ஸ்கார்செஸி. இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றவர் குவின்டின் டாரான்டினோ (Quentin Tarantino) .
குவின்டின் டாரான்டினோ (Quentin Tarantino)
Reservoir Dogs படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகின் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் குவின்டின் டாரான்டினோ . மையமற்ற கதைசொல்லல் , வரலாற்று கதாபாத்திரங்களை வைத்து காமிக் கதாபாத்திரங்களைப் போல் கையாள்வது , வன்முறையைத் தூண்டும் வகையில் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளை ரசிக்கும் வகையில் அமைப்பது இவரது படங்கள் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பவை. Pulp Fiction , Kill Bill , Django Unchained , The Hateful Eight , Inglorious Bastards , Once Upon A Time In Hollywood என தனது படங்களின் வழியாக உலகம் முழுவதிலும் தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். டாரான்டினோவின் படங்களை இன்ஸ்பிரேஷனாக வைத்து நிறைய படங்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன.
டாரான்டினோவின் கடைசி படம்
டாரான்டினோ இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். தனது 10 ஆவது படத்தை இயக்கிய பின் தான் திரைப்படங்கள் இயக்குவதை கைவிட இருப்பதாக டாரன்டினோ முன்பு தெரிவித்திருந்தார். இந்த படம் இதுவரை இயக்கிய படங்களுக்கு ஒரு முடிவாக இருக்கும் என்று அவர் படங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் இந்தப் படத்தில் வருவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. டாரான்டினோவின் 10 ஆவது படத்திற்கு ’The movie Critic' என்று டைட்டில் வைக்கப் பட்டது. பத்திரிகைகளில் விமர்சனங்கள் எழுதும் ஒருவரின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக டாரன்டினோ தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கைவிடப்பட்டதா ’The movie Critic'
டாரான்டினோவின் கடைசி படமாக உருவாக இருந்த ’The movie Critic' படம் கைவிடப் பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை டாரன்டினோ எடுக்கப் போவதில்லை என்றும் இதற்கு பதிலாக வேறு ஒரு கதையை அவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுவே அவரது கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது