Allu Arjun Transformation: 'கங்கோத்ரி டூ புஷ்பா 2...' அன்று கேலிநாயகன்.. இன்று ஸ்டைலிஷ் ஸ்டார்..! கலக்கும் அல்லு அர்ஜூன்..!
காளி உருவத்தில் மிகவும் கம்பீரமான லுக்கில், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல்கள், எலுமிச்சை மாலை அணிந்து புடவையில் கர்வமாக நிற்கும் அல்லு அர்ஜுன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு விட்டனர்.
பான் இந்திய படமாக வெளியாகி சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்தது இயக்குனர் சுகுமாரின் புஷ்பா : தி ரைஸ் திரைப்படம். செம்மரக்கடத்தல் செய்யும் நபராக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இப்படம் சுமார் 400 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல பாடி லாங்குவேஜ், பேச்சு என அனைத்தையும் சிறப்பாக செய்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மிரட்டலான புஷ்பா 2 போஸ்டர்:
தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகராக கருதப்படும் நடிகர் அல்லு அர்ஜுன் 41வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக படத்தின் கான்செப்ட் டீசரை நேற்று வெளியிட்டது. இது ரசிகர்களின் பேராதரவை பெற்றது. மேலும் அல்லு அர்ஜுன் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. காளி உருவத்தில் மிகவும் கம்பீரமான லுக்கில், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல்கள், வங்கி, ஒட்டியாணம், நகைகள், எலுமிச்சை மாலை அணிந்து புடவையில் கர்வமாக நிற்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு விட்டனர். இந்த போஸ்டர் பின்னணி என்னவாக இருக்கும் என்பது குறித்து பலரும் அவரவரின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கங்கோத்ரி டூ புஷ்பா 2 :
அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி இருந்தாலும் ஒரு ஹீரோவாக அறிமுகமானது 2003ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' திரைப்படத்தில். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் ஒரு பெண் போல வேடமிட்டு நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இதற்காக அவர் ஏராளமான ட்ரோல், விமர்சனங்களுக்கு உட்பட்டார். அன்று ட்ரோல் செய்யப்பட்ட ஒரு இளைஞன் தனது 20 ஆண்டு கால திரைப்பயணத்தில் உலக அளவில் பிரபலமான ஒரு ஸ்டைலிஷ் ஸ்டார் நடிகராக கொண்டாடப்படுகிறார். அதே நடிகர் இன்று ஒரு கடவுளை போல கர்வமாக புடவையில் காட்சியளிக்கும் விதத்தில் வெளியாகியுள்ள புஷ்பா 2 போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த திரை பயணத்தில் அல்லு எப்படி ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் கொண்டுவந்து இருக்கிறார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.