Prabhudeva: வா வா என் தேவதையே... மகளுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த பிரபுதேவா!
தனது மகள் மற்றும் மனைவியுடன் திருப்பதி சென்று நடிகர் பிரபுதேவா வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி ஹிமானி தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதுவரை தனது குழந்தையை இணையதளங்கள் மற்றும் பத்திரிகை வெளிச்சம் நெருங்காதபடி தவிர்த்து வந்த பிரபுதேவா, தற்போது தனது மனைவி மற்றும் மகளுடம் திருப்பதி சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகளுடன் பிரபுதேவாவின் மனைவி ஹிமானி மகிழ்ச்சியாகக் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபுதேவா
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களில் கலக்கி வருபவர். தற்போது சினிமாவைத் தவிர்த்து முக்கியமான ஒன்று அவரது வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கிறது. அண்மையில் பிறந்த பிரபுதேவாவின் மகள் தான் அந்த புதிய வருகை. தனது மகளின் வருகைக்குப் பிறகு சிறிது காலத்திற்கு சினிமா மற்றது எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தனது குடும்பத்தில் கவனம் செலுத்தப் போவதாக முன்னதாக பிரபுதேவா தெரிவித்திருந்தார்.
தோல்வியில் முடிந்த முதல் திருமணம்
தன் கரியரின் ஆரம்பக் காலக்கட்டத்தில் டான்சரான ரமலத் என்பவரை பிரபுதேவா காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் 2008ஆம் ஆண்டு இவர்களது மூத்த மகன் கேன்சரால் உயிரிழக்கத் தொடர்ந்து பல்வேறு கருத்து வேறுபாடுகள், நடிகை நயன்தாராவுடனான காதல் ஆகிய காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று 2011ஆம் ஆண்டு பிரிந்தனர்.
இரண்டாவது திருமணம்
தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு நயன்தாராவுடனான காதலும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிசியோதெரபிஸ்ட்டான ஹிமானியை கொரோனா ஊரடங்கின் மத்தியில் 2020ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் பிரபுதேவா.
இந்நிலையில் பிரபுதேவா - ஹிமானி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிரபுதேவா தன் பிறந்தநாளில் மனைவியுடன் வருகை தந்தார்.
மேலும் பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாத் இருவருக்கும் ஆண் குழந்தைகளே உள்ள நிலையில், சுந்தரம் மாஸ்டரின் குடும்பத்தில் இதுவே முதல் பெண் குழந்தை. இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின.
50 வயதில் தந்தை
தற்போது 50 வயதை பிரபுதேவா எட்டியுள்ள நிலையில், முன்னதாக இவரது நடிப்பில் பஹீரா திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்த நிலையில், இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது.
பேட்ட ராப்
அடுத்ததாக பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் பூஜை அண்மையில் தொடங்கியது. புளூ ஹில் ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். காமெடி கலந்து கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகும் நிலையில், ஹீரோயினாக நீண்ட நாள்களுக்குப் பிறகு நடிகை வேதிகா நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.