Mission Chapter 1: 29 ஆண்டுகளில் முதல்முறை .. மிஷன் சாப்டர் 1 படத்தால் அருண் விஜய் மிகுந்த மகிழ்ச்சி.. ஏன் தெரியுமா?
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே” .
நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 (Mission Chapter 1) படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை காணலாம்.
மிஷன் சாப்டர் 1 (Mission Chapter 1)
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே” . இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில் மகாதேவ் கதை எழுதியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் , ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ், நியூ மார்ச் ஃபாஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் ஆஸ்பென் ஃபிலிம் புரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.இந்த படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 12) வெளியாகிறது.
கடந்த வாரம் மிஷன் சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அருண் விஜய், “நான் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் தயாரான படம் தான் மிஷன் சாப்டர் 1 படம் தான். முதல்முறையாக ஏ.எல்.விஜய்யுடன் இப்படத்தின் மூலம் நான் இணைந்துள்ளேன். நாங்கள் முதலில் வேறொரு கதையை பண்ணுவதாக இருந்தது. ஆனால் விஜய் தான் மிஷன் கதையை சொன்னார். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த படம் நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் ஆக அமையும்” என தெரிவித்திருந்தார்.
இந்த பொங்கல் அருண் விஜய்க்கு ஏன் சிறப்பு?
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் 29 ஆண்டுகளாக நடித்து வருகிறார். நடிகர் விஜயகுமாரின் மகனாக அருண் குமார் என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு வெளியான “முறை மாப்பிள்ளை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களில் நடித்த அவருக்கு திருப்புமுனையாக பெரிய அளவில் படம் அமையவில்லை. கிட்டதட்ட 17 ஆண்டுகள் கழித்து தான் அருண் விஜய் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ளவே தொடங்கினார்கள். 2012 ஆம் ஆண்டு வெளியான தடையறத் தாக்க படம் ஆக்ஷன் ஹீரோவாக அவரை நிலை நிறுத்தியது. தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக கலக்கினார். இதற்கிடையில் அவரின் பெயர் அருண்குமாரில் இருந்து அருண் விஜய் ஆக மாற்றம் கண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், மாஃபியா சாப்டர் 1, யானை, சினம் என பல படங்கள் அருண் விஜய்யை முன்னணி நடிகராக உயர்த்தியது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் மிஷன் சாப்டர் 1 படம் தான் அருண் விஜய் கேரியரில் பண்டிகையில் வெளியாகும் முதல் படமாகும். அதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.