(Source: ECI/ABP News/ABP Majha)
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
புகழ்பெற்ற ஹாலிவுட் படமாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் 4 ஆம் பாகமான “Pirates of the Caribbean: On Stranger Tides” என்ற படத்தில் நடித்தவர் தமயோ பெர்ரி.
அமெரிக்காவில் சுறா தாக்கியதில் பிரபல ஹாலிவுட் நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற ஹாலிவுட் படமாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் 4 ஆம் பாகமான “Pirates of the Caribbean: On Stranger Tides” என்ற படத்தில் நடித்தவர் தமயோ பெர்ரி. இவர் சார்லஸ் ஏஞ்சல்ஸ் 2, ப்ளூ க்ரஷ் உள்ளிட்ட படங்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். ஓஹூ தீவில் பிறந்து வளர்ந்த தமயோ பெர்ரி, ஹவாய் தீவில் சிறந்த நீர்சறுக்கு வீரராக வலம் வந்தார்.
மேலும் நீர்சறுக்கு பயிற்சியாளராகவும் வேலை செய்து வந்தார். மேலும் கடலில் யாரேனும் தவறி விழுந்தால் அவரை காப்பாற்றும் பணியையும் செய்து வந்தார். இதனிடையே 49 வயதான அவர், கடந்த ஜூன் 24 ஆம் தேதி வழக்கம்போல நீர்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணியளவில் மலேகஹனா கடற்கரை பகுதியில் அவரை சுறா ஒன்று தாக்கியது. இதனை கவனித்த ஒருவர் உடனடியாக கடலோர காவல்படைக்கு அவசரகால உதவி வேண்டி போன் செய்துள்ளார்.
உடனடியாக அந்த பகுதிக்கு வந்த கடற்படை காவல் வீரர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிய தமயோ பெர்ரியை கடற்கரைக்கு கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். அவரது உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுறா மீன்கள் கடித்த தடம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமயோ பெர்ரி இறந்த பகுதியில் சுறா தாக்குதல் இருக்கிறது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பெர்ரிக்கு ஒரு கை மற்றும் கால் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமயோ பெர்ரி மறைவுக்கு பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்ட 2வது சுறா தாக்குதல் என்பதால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. அதேசமயம் உயிரிழந்த தமயோ பெர்ரிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.