Pathaan Box Office: உலகம் முழுவதும் ரூ.988 கோடி வசூல்... சீன மொழியில் வெளியாகாமலேயே வசூல் சாதனை படைக்கும் பதான்!
சீனாவில் ரிலீஸ் செய்யப்படும் இந்தியப் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டி வசூலை வாரிக்குவிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில் இந்த சூழல் இல்லாமலேயே பதான் சாதனை படைத்து வருகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.
காவி பிகினி உடை தொடங்கி பதான் படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி படம் பிளாக்பஸ்டராக மாறியுள்ளது.
மேலும், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் பெரும் ஹிட் அடித்துள்ளதுடன் வசூலிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறது.
அதன்படி, இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட பாகுபலி 2 படம் 510.99 கோடி வசூலித்து புரிந்த இமாலய சாதனையை பதான் படம் தற்போது முறியடித்துள்ளது. பதான் படம் வெளியாகி மொத்தம் 25 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இப்படத்தின் வசூல் சாதனைகள் இன்று வரை தொடர்ந்து வருகின்றன.
அதன்படி, இந்தியாவில் மட்டும் பதான் படம் 511.42 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இதுவரை 372 கோடி வசூலையும் பதான் படம் வாரிக்குவித்து ஒட்டுமொத்தமாக 988 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
சீனாவில் ரிலீஸ் செய்யப்படும் இந்தியப் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டி வசூலை வாரிக்குவிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவை எதுவுமின்றி பதான் படம் சீன மொழியில் வெளியிடப்படாமலேயே மிகக் குறுகிய காலத்தில் 1000 கோடி வசூலை நெருங்கி வருவது பாலிவுட் வட்டாரத்தை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்கிய இந்தப் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக்கான் 4 ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 25, 2023 அன்று வெளியான பதான் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்தார்.
விஷால்-சேகர் இசையமைக்க சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் பதான் படத்துக்கு பின்னணி சேர்த்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானியின் டன்கி மற்றும் அட்லீயின் ஜவான் ஆகிய படங்களில் அடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பதான் பட வெற்றி பற்றி முன்னதாகப் பேசிய ஷாருக்கான், “நாம் செய்யும் செயல் வேலைக்கு ஆகாதபோது நம்மை நேசிப்பவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள், எனக்கு அன்பைக் கொடுக்க லட்சக்கணக்கானவர்கள் இருப்பது என் அதிர்ஷ்டம்.
மக்களிடம் எங்கள் படத்தை நிம்மதியாக வெளியிட அனுமதிக்குமாறு கேட்க வேண்டிய சூழல் முன்னதாக இருந்தது. திரைப்படம் பார்ப்பதும் படம் எடுப்பதும் காதலில் திளைக்கும் அனுபவம் போன்றது. பதான் படத்தை வெளியிட எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் மகிழ்ச்சியாக படம் வெளியிடுவதை தடுக்கக்கூடியவை இருந்தபோதிலும் எங்கள் படத்தை ஆதரித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நாங்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.