கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
வேட்டை மன்னன் முதல் ஜெயிலர் 2 வரை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உருவான சுவாரஸ்ய பின்னணி

27 வயதில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் நெல்சன் இயக்கத்தில் வெளியாக இருந்த முதல் படம் கைவிடப்பட்டது. இன்று ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் வெற்றிகள், விமர்சனங்கள் எனப் பலவற்றைக் கடந்து வந்துள்ள அவரது சினிமா பயணத்தில், ஜெயிலர் 2 மூலம் இந்திய சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குநராக உருவெடுத்துள்ளார் நெல்சன்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2, நாளை (அக்டோபர் 15) திரையரங்குகளில் வெளியாகிறது. ஒருபக்கம் ரஜினி ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாடா காத்திருந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் இயக்குநர் நெல்சனின் ரசிகர்களும் படத்தை ஆவலாக எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். ஏனால் நெல்சனின் திரை வாழ்க்கை அத்தகைய சுவாரஸ்யங்களால் நிறைந்தது
முதல் படம் ட்ராப்
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கிய நெல்சன், தனது 27 வயதில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கத் திட்டமிட்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்ற அவரது கனவு அப்போதே நிறைவேறவில்லை.
அதன்பிறகு தொலைக்காட்சியில் பணியாற்றிய அனுபவத்துடன், தனது தனித்துவமான நகைச்சுவை பாணியையும் திரைக்கதை அணுகுமுறையையும் வளர்த்துக்கொண்டார். 2018-ல் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் அவருக்கு வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.
பீஸ்ட் விமர்சனங்கள்.. ஜெயிலர் கொடுத்த பதிலடி!
டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்குக் கிடைத்தது. ஆனால், அந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. ரசிகர்கள் பீஸ்ட் படத்தை மட்டுமில்லாமல் நெல்சனையும் சேர்த்து ட்ரோல் செய்யத் தொடங்கினார்கள். பிரபல விருது விழா நிகழ்ச்சியில் நெல்சன் உதாசீனப்படுத்தப்பட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. மேலும் நெல்சன் அடுத்தபடியாக இயக்கவிருந்த ஜெயிலர் படமும் அவரது கையை விட்டு நழுவும் சூழலும் உருவானது. ஆனால் ரஜினி நெல்சனின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்ததால் இந்த படம் தொடர்ந்தது. அந்த நம்பிக்கையை நெல்சன் காப்பாற்றவும் செய்தார்.
2023-ல் வெளியான இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. பீஸ்ட் படத்துக்குப் பிறகு எழுந்த விமர்சனங்களுக்கு, ஜெயிலர் மூலம் தனது பாணியிலேயே பதிலளித்தார் நெல்சன். உலகளவில் இப்படம் ரூ650 கோடி வரை வசூல் செய்தது.
புதிய உச்சம் தொடுமா ஜெயிலர் 2
ஜெயிலர் 2 படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதைவிட பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 உருவாகியுள்ளது. பொதுவாக இரண்டாம் பாகத்தில் உடன்பாடில்லாதவர் ரஜினி. ஏற்கனவே பாட்சா 2 மற்றும் பேட்ட 2 படத்தை நிராகரித்ததாக ரஜினி சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஜெயிலர் 2 படத்தை இயக்க அவரே நெல்சனிடம் கேட்டுள்ளார் என்பது படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்கிறது. முந்தைய பாகத்தை விட கூடுதலான கதாபாத்திரங்கள் , கூடுதல் மாஸ் என ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. விமர்சகர்கள் மற்றும் மக்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் பட்சத்தில் ஜெயிலர் 2 ப்ளாக்பஸ்டர் வெற்றி பெறும். இந்த வெற்றி நெல்சனை இந்திய சினிமாவில் முன்னணி கமர்சியல் இயக்குநராக உயர்த்தும் என்பது நிச்சயம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















