Kriti Sanon as Sita | ’பரமசுந்தரியாக’ வெற்றி ஏணியில் ஏறிய க்ரிதி சனோன்.. இப்போது சீதை ரோலில்...
`ஆதிபுருஷ்’ திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், நடிகை க்ருதி சானோன், சீதையின் வேடத்தில் நடிக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
தான் சோலோவாக முன்னணி வேடத்தை ஏற்று நடித்த `மிமி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த பணிகளில் வேகம் காட்டி வருகிறார் பாலிவுட் நடிகை க்ருத்தி சானோன். `மிமி’ படத்தில் அவரது நடிப்புக்காக, நடிகை க்ருத்தி சானோன் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டார். சிறந்த நடிகைகளுள் ஒருவராகக் கருதப்படும் க்ருத்தி சானோன் தற்போது தன் கரியரில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஓம் ரௌத் இயக்கி வரும் `ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்கிறார் நடிகை க்ருத்தி சானோன். `ஆதிபுருஷ்’ திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், நடிகை க்ருத்தி சானோன், சீதையின் வேடத்தில் நடிக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் மகிழ்விப்பதற்காக அவர் மீது எழுந்துள்ள பொறுப்பின் மீது தனக்கு பயம் இல்லை எனக் கூறியுள்ளார் நடிகை கிருதி சனோன். `நான் ஏற்று நடித்த பிற கதாபாத்திரங்களிலும் நான் இதே போன்ற பொறுப்புடனேயே நடித்திருக்கிறேன். முதலில் நான் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன உணர்கிறது, எதற்காகப் போராடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுள் ஒரு தரப்பினருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்துடன் யாராலும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க முடியாது’ எனக் கூறியுள்ளார் நடிகை க்ருத்தி சானோன்.
சீதையின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைத் தான் மறுக்கவில்லை என்று கூறுகிறார் நடிகை க்ருத்தி சானோன். `நான் அந்தப் பொறுப்பைப் புரிந்து கொள்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது, மனதில் கொள்ள வேண்டிய பக்தியுணர்வை நான் புரிந்து கொள்கிறேன். இந்தக் கதாபாத்திரம் அதற்குத் தேவையான எல்லைகளுக்கு உட்பட்டு எழுதப்பட்டுள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீதையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் அதன் எல்லையும், பெருமையும் படத்தின் இயக்குநருக்குத் தான் சேரும் எனக் கூறுகிறார் நடிகை க்ருத்தி சானோன். `இந்தப் பெருமை இயக்குநர் ஓம் ரௌத்துக்குச் செல்ல வேண்டும். அவர் மதத்தை மதிக்கிறார். மேலும் அது குறித்து அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவரது கண்ணோட்டம் புதுமையானதாக இருக்கும். மேலும் அவர் எப்போதும் விதிக்கப்பட்டிருக்கும் எல்லைகளைக் கடக்க மாட்டார். என்னைப் பொருத்த வரையில், இயக்குநரின் கண்ணோட்டத்தில் உள்ள தெளிவு பல்வேறு விவகாரங்களை எளிதாக்கிவிடும். இது என் மனதில் பட்டபடி என் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க எனக்கு உதவுகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் `ஆதிபுருஷ்’ படத்திற்காகத் தான் மிகவும் மகிழ்வுடன் இருப்பதாகக் கூறுகிறார் நடிகை க்ருத்தி சானோன். `படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் இதுவரை பார்த்திராத பல்வேறு புதிய உத்திகளைக் கொண்டு இந்தப் படம் காட்சியாக்கப்படுவதால் இது எனக்குப் புதிய தனித்துவமான அனுபவமாக இருக்கிறது. இங்கு முழுவதும் நீல நிற ஸ்க்ரீன் கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பில் கற்றுக் கொள்வதற்குப் பல புதிய பாடங்கள் இருக்கின்றன’ என்று அவர் கூறியுள்ளார்.