Fahadh Faasil Birthday : ஃபகத் பாசிலுக்கு பிறந்தநாள்.. அவரோட இந்த படங்களைப் பாக்க மறக்காதீங்க..
மாமன்னன் படத்தில் ரத்தினவேலுவாக நடித்த ஃபகத்தை மட்டும் பாத்தவர்களை ஃபகத் ஃபாசில் ரசிகர் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.. இந்தப் படங்கள் எல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள்
சமீப காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு நடிகரின் பெயர் ஃபகத் ஃபாசில். இன்று அவரது பிறந்த நாளும்கூட. இந்த நாளில் ஒருவர் தனது வாட்ஸப் ஸ்டேட்டசில் ஃபகதின் புகைப்படத்தை வைக்கலாம். அவரது கண்களின் மேல் காதல் கொள்ளலாம், அவர் நடித்த கதாபாத்திரங்களின் (ரத்தினவேல் தவிர்த்து) ஸ்டில்களை எடுத்து ஹார்ட் எமோஜிக்களைப் விடலாம். ஆனால் தன்னை ஒர் ஃபகத் ஃபாசில் ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த சில படங்களை நிச்சயம் பாத்திருக்க வேண்டும்.
ஆமேன் (Amen)
ஈ.மா.யு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி ஃபகத் ஃபாசில், ஸ்வாதி ரெட்டி கலாபவன் மணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஆமென். சாலமன் என்கிற இசைக்கலைஞன் (ஃபா.ஃபா) மற்றும் சோஷானா (ஸ்வாதி ரெட்டி ) ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் கதை என்று எளிமையாக விளக்கலாம். ஆனால் இந்தக் காதல் கதை நிகழும் கிராமம் அங்கு வாழும் மக்கள் என அனைத்தையும் உயிரோட்டமுள்ள ஒரு உலகத்தை உருவாக்கியிருப்பார் இயக்குநர். இந்த உலகத்திற்குள் ஒரு சாதாரண மனிதனின் குழந்தைமையை தனது நடிப்பில் வெளிகாட்டியிருப்பார் ஃபகத்
மஹேஷிண்டே பிரதிகாரம் (maheshinte prathikaaram)
பெரும்பாலானவர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழில் நிமிர் என்று சுமாரான ரீமேக் செய்யப்பட்டது . மகேஷ் என்கிற ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர். தான் பல வருடங்களாக தொழில் செய்து வந்த அதே இடத்தில் தன்னை ஒருவர் அடித்துவிட்டதால் அவமானப்பட்ட மஹேஷ் ஒரு சபதம் எடுக்கிறார். தன்னை அடித்தவனை அதே இடத்தில் திருப்பி அடிக்காமல் தான் செருப்பு அணியப்போவதில்லை என்று. இந்த சபதத்தில் அவர் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை. துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு பழிவாங்குவதை நாம் பல சமயங்களில் பார்த்திருக்கிறோம் ஆனால் சில நேரங்களில் ஒரு சாமானியன் பழி வாங்கும் கதை இவ்வளவு சின்னதாகத்தான் இருக்கிறது. அந்த சாமானியனின் இடத்தில் தன்னை பொருத்திக்கொள்வதை ஃபகத் மிக சிறப்பாகவே செய்திருப்பார்.
கும்பலங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)
கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தை இரண்டு காரணங்களுக்காக நீங்கள் பார்க்கலாம் முதல் காரணம், சிதைந்து போன ஒரு குடும்பத்தின் நான்கு ஆண்களின் தங்களுக்கான ஒரு குடும்பத்தை எப்படி உருவாக்கிக் கொள்கிறார்கள் என்கிற மிக அழகான கதையை தெரிந்துகொள்வதற்காக. மற்றொன்று எந்த வித சத்தமும் கோபமும் இல்லாமல் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தை சிரித்துக்கொண்டே எப்படி நடிக்கவேண்டும் என்று ஃபகத் ஃபாசிலை ரசிப்பதற்காக பார்க்கலாம்.
மாலிக் (Malik)
ஆங்கிலத்தில் ஒரு காட்ஃபாதர் போல் , தமிழில் ஒரு நாயகன்போல், மலையாளத்திற்கு மாலிக் படத்தை குறிப்பிடலாம். ஆனால் முந்தைய இரண்டு படங்களுக்கு மாலிக் படத்திற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மாலிக் படத்தின் கதாநாயகன் ஒரு இஸ்லாமியர். கதை நெடுகிலும் பல்வேறு வயது வித்தியாசங்களில் வரும் ஃபகத் ஃபாசில் எல்லா கதாபாத்திரத்திலும் தான் மகா நடிகன் என்று நிரூபித்துக் காட்டுவார்.
ட்ரான்ஸ் (Trance)
ஃபகத் ஃபாசிலை சற்று துள்ளலான ஒரு கதாபாத்திரத்தின் அதுவும் அவரது மனைவியான நஸ்ரியாவுடன் நடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ட்ரான்ஸ் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.