சந்திரமுகி முதல் சூரரைப் போற்று வரை... தீபாவளிக்கு ரிலீஸாகி கலக்கல் ஹிட் அடித்த படங்கள்!
Deepavali Releases: தீபாவளி ரிலீஸ் படங்களாக வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படங்களின் பட்டியல்!
தீபாவளி என்றாலே பட்டாசு, லீவு, பண்டிகை, புது டிரஸ் என இவை அனைத்தையும் தாண்டி தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸாகப் போகுது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. காலம் காலமாக தீபாவளிக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாவதும், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். அப்படி வெளியான படங்களில் யாருடைய படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சிறந்த 10 படங்களின் பட்டியல் இதோ :
பிரியமானவளே:
2000ம் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் விஜய் நடித்த 'பிரியமானவளே' திரைப்படம் வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசனின் 'தெனாலி' படத்துடன் நேரடியாக மோதினாலும் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்தது 'பிரியமானவளே' திரைப்படம்.
சந்திரமுகி :
2005ம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் 'சச்சின்' ரஜினிகாந்தின் 'சந்திரமுகி' மற்றும் கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' என மூன்று படங்கள் ஒரே நாளில் களத்தில் குதித்தன. இந்த ரேஸில் மூன்று படங்களுக்கு ஹிட்டானாலும் சூப்பர்ஸ்டாரின் 'சந்திரமுகி' திரைப்படம் மற்ற இரண்டு படங்களின் வெற்றியை மிஞ்சி முதலிடத்தை கைப்பற்றியது.
நந்தா :
2001ம் ஆண்டு தீபாவளிக்கு ஆளவந்தான், ஷாஜஹான், மனதை திருடிவிட்டாய், பார்த்தாலே பரவசம், நந்தா என பல படங்கள் வெளியாகின. இந்த தீபாவளிக்கும் கமல் vs விஜய் என போட்டி நிலவி இருந்தாலும் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'நந்தா' திரைப்படம்.
ரமணா
2002ம் ஆண்டு தீபாவளிக்கு தான் முதன்முதலாக தல vs தளபதி மோதல் ஆரம்பமானது. விஜய்யின் 'பகவதி' மற்றும் அஜித்தின் 'வில்லன்' படங்கள் வெளியாகின. அதே நாளில் இவர்களுடன் மோதலில் இறங்கியது கேப்டன் விஜயகாந்தின் 'ரமணா' திரைப்படம். மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற படங்களாக அமைந்தாலும் மற்ற இரண்டு படங்களை காட்டிலும் விஜயகாந்தின் ரமணா படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
பிதாமகன் :
2003ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இயக்குநர் பாலாவின் 'பிதாமகன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. விக்ரம், சூர்யா இணைந்து நடித்த இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
மன்மதன் :
2004ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சிம்பு - ஜோதிகாவின் 'மன்மதன்' திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இப்படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
வரலாறு :
2006ம் ஆண்டு தீபாவளிக்கு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வரலாறு' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜித் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு தீபாவளி விருந்தாகவே அமைந்தது.
துப்பாக்கி :
2012ம் ஆண்டு தீபாவளிக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஒரு வித்தியாசமான பரிணாமத்தில் நடித்த இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாகவே அமைந்தது.
மெர்சல் :
2017ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய் படம் தான் அட்லீ இயக்கத்தில் வெளியான 'மெர்சல்'. அட்லீ - விஜய் கூட்டணியில் தெறி படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அடுத்தாக அவர்கள் கூட்டணி சேர்ந்த 'மெர்சல்' படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. எகிறிய எதிர்பார்ப்பையும் மீறி சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
சூரரைப் போற்று :
2020ம் கொரோனா காலகட்டம் என்பதால் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகின. அப்படி ஓடிடியில் வெளியான படம் தான் சுதா கொங்கரா இயக்கிய சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம். இப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் கைப்பற்றியது.