Leo Success Meet: ஸ்கெட்ச் ஆடியோ லாஞ்ச்சில் இல்லை; சக்சஸ் மீட்டில்! குட்டிக்கதையில் அரசியலுக்கு அச்சாரமிடுவாரா விஜய்?
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி உச்சம் பெற்று, மற்ற கட்சிகளுக்கு அச்சம் தருவாரா..? அல்லது மிச்ச சொச்ச கட்சிகளை போல் முடிவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபிஸில் லியோ திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது.
மேலும், சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தநிலையில், இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக லியோ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நிகழ்வில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க அனைத்து தரப்பு மக்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், லியோவின் இரண்டாம் பாகமும் மேடையில் அறிவிக்கப்படலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.
முன்னதாக, லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெற இருந்த நிலையில், ரசிகர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு தயாரிப்பு நிறுவனம் வேண்டாமென்று முடிவு செய்தது. நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போதும் குட்டி கதை, தான் கடந்து வந்த பாதை, ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவார். அதேபோல், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அவரது அரசியல் பாதை தொடங்குமா..? எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்..? என்பது குறித்து பேசுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்விதமாக ஆடியோ வெளியீட்டு விழா சில காரணங்களால் தடைபட்டது.
இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் 12 நாட்களில் ரூ.540 கோடிக்கு மேல் தியேட்டர்களில் வசூல் செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் எழுதிய இந்தப் படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதி என தெரியவந்தது.
இதையடுத்து, இதை கொண்டாடும் விதமாக லியோ சக்சஸ் மீட் இன்று நடைபெறுகிறது. இதில், நடிகர் விஜய் வழக்கம்போல் குட்டிக்கதையை அடுக்குவார் என்றும், அந்த கதையில் தனது அரசியல் வருகை குறித்தும் சொல்லாமல் சொல்வாரா அல்லது நேரடியாகவே அறிவிப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 2009ம் ஆண்டு நடிகர் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரால் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அது காலப்போக்கில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என பெயர் மாற்றப்பட்டு, இதன்மூலம் மக்கள் பல்வேறு நலப்பணிகள் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களால் இரத்த தானம், அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அது மறுபிரவேசம் பெற்று தற்போது முழுநேர பணியாக ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தில் பல பிரிவுகளில் பிரிக்கப்பட்டு மகளிரணி, இளைஞரணி, தொழில்நுட்ப அணி, மாணவரணி என அரசியலுக்கான அச்சாரம் போடப்பட்டது. தற்போது, விஜயின் உத்தரவின் பேரில் 234 தொகுதிகள் சார்ந்து இயங்கி வருகிறது விஜய் மக்கள் இயக்கம். விஜய் அரசியலுக்கு வந்தால், சீமான் போன்றோர் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சினிமா டூ அரசியல் பயணம்:
திமுக நிறுவனர் சி.என்.அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியின் வாரிசான எம்.கருணாநிதி முதல் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் நடிகர் ஜெ.ஜெயலலிதா வரை, கோலிவுட் பிரபலங்கள் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளனர். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் மறைந்தாலும் அதிமுகவும் திமுகவும் இன்னும் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, இயக்குநர் சீமானால் நிறுவப்பட்ட நாம் தமிழர் கட்சியும், 25 ஆண்டுகளாக அரசியல் வருவேன், வரமாட்டேன் என கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக் காரணங்களால் அரசியல் போட்டியில் இருந்து விலகினார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (MNM) ஆரம்பத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சீமானின் கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றது.
இதற்கெல்லாம் முன்னோடியாக நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி 2011ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து, தற்போது காணாமல் போய்கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் கடந்து பல நடிகர்கள் அரசியல் கட்சிகள் தொடங்கி காணாமல் போயுள்ளதையும் கண்டுள்ளனர்.
இந்த பட்டியலில் நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி உச்சம் பெற்று, மற்ற கட்சிகளுக்கு அச்சம் தருவாரா..? அல்லது மிச்ச சொச்ச கட்சிகளை போல் முடிவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.