Leo Special Show: அதிகாலைக் காட்சிக்காக வெயிட்டிங்கில் லியோ.. மீண்டும் தள்ளிப்போகும் முதல்நாள் புக்கிங்?
அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தன் வாதத்தில் தெரிவித்தார்.
லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி, மற்றும் முதல் காட்சியாக 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் பிற்பகல் 1 மணிக்கு விசாரித்தது.
லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் “வரும் அக்.19ஆம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டது
ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்றால் 18.45 மணி நேரம் தான் ஆகிறது. எனவே 6 காட்சிகள் திரையிடலாம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தன் வாதத்தில், “அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது” எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்று கோரியும், அவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, நாளை காலை முதல் வழக்காக இவ்வழக்கு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை நாளை ஒத்திவைத்தார்.