Vijay : என் மகனிடம் விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை! மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
மறைந்த நடிகர் விஜயகாந்த் குடும்பத்தினரை நடிகர் விஜய் சந்தித்த போது விஜயாகாந்தின் மகன் விஜயபிரபாகரனிடம் அவர் பேசியது குறித்து பிரேமலதா பகிர்ந்துகொண்டுள்ளார்
தி கோட்
விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரசாந்த் , பிரபுதேவா , சினேகா , லைலா , மோகன் , ஜெயராம் , வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை செயற்கை தொழில்நுட்ப பயன்பாட்டால் நடிக்க வைத்துள்ளார்கள் படக்குழுவினர்.
தி கோட் படம் படப்பிடிப்பில் இருந்தபோது விஜயகாந்த் மறைந்தார். விஜயகாந்திற்கு புகழாரம் சூட்டும் வகையில் தி கோட் படக்குழு இந்த முயற்சியை எடுத்துள்ளது. சமீபத்தில் தி கோட் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிபடுத்தினார்.
விஜய்காந்த் நடித்த வெற்றி படத்தில் தான் விஜய் முதல்முறையாக அறிமுகமானார். சமீபத்தில் கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு , தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி , மற்றும் நடிகர் விஜய் ஆகிய மூவரும் விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
விஜயகாந்த் காட்சிகள் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜய் தன் வீட்டிற்கு வந்தது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் “ விஜய் எங்கள் வீட்டிற்கு வருவது உங்களுக்கு வேண்டுமானால் புது விஷயமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது பழக்கப்பட்ட விஷயம். விஜய் சாலிகிராமத்தில் எங்கள் வீட்டு பக்கத்து வீட்டில் இருந்தார். கேப்டன் விஜயகந்திற்கு எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையில் எப்படியான நட்பு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனால் எங்கள் வீட்டு பிள்ளையாக தான் விஜய் வந்தார். தி கோட் படத்தில் ஏ.ஐ மூலம் விஜயகாந்தை உருவாக்க அனுமதித்ததற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். மேலும் படத்தில் விஜயாந்தின் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக வந்திருப்பதாகவும் நிச்சயமாக நாங்கள் குடும்பத்துடன் வந்து படம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
GOAT la Captain Scenes Vera Level la Vanthurku🔥
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva) August 24, 2024
- Premalatha Vijayakanth#TheGreatestOfAllTime #TVKVijay #Leo @actorvijay pic.twitter.com/gAL8s74FBq
நடிகர் விஜய் என்னுடைய இரு மகன்களுடன் ரொம்பவும் நீண்ட நேரம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். விஜய் தான் நடிப்பில் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என என் மகன் விஜயபிரபாகரன் அவரிடம் சொன்னார். பதிலுக்கு விஜய் அரசியலில் நீ தான் எனக்கு சீனியர். பத்திரிகையாளர் சந்திப்பை எல்லாம் நன்றாக கையாள்கிறீர்கள் என்று சொன்னார். ” என பிரேமலதா தெரிவித்துள்ளார்.