Cannes Festival: 'காஸ்டியூம் அடிமைகள்..' ஐஸ்வர்யா ராய் ஆடையை கடுமையாக விமர்சித்த 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர்..!
கேன்ஸ் திரைப்பட விழாவில், ஐஸ்வர்யா ராய் உடையை ஒரு ஆண் தரையில் படாதபடி தூக்கி சென்றதை பார்த்து 'காஸ்டியூம் அடிமைகள்' என் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 'காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர்.
ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கோலாகலமாக கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 16ம் தேதியன்று பிரான்ஸில் துவங்கியது. இந்த பிரமாண்டமான திரைப்பட விழாவில் 600க்கும் மேற்பட்ட பல மொழி படங்கள் திரையிடப்படும். இந்தியாவை சேர்ந்த பல திரைப்பட கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
கேன்ஸ் திரைப்பட விழா :
இந்த விழாவின் சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதை மிகவும் கவுரவமாக கருதுகிறார்கள் கலைஞர்கள். பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர் ஆவண படத்தின் தயாரிப்பாளரான குனீத் மோங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் தனது வித்தியாசமான ஆடையால் சிறப்பு சிவப்பு கம்பளத்தில் அசத்தும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த ஆண்டும் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு உடையில் காட்சியளித்தார்.
அலுமினியம் மற்றும் கிரிஸ்டலில் ஆன கவுன் ஒன்றை அணிந்து இருந்தார். அவரின் இந்த உடைய பலரும் பாராட்டினாலும் சோசியல் மீடியாவில் ட்ரோல் மூலம் கலாய்க்கவும் செய்தார்கள். அப்படி ஐஸ்வர்யா ராய் உடை குறித்து 'காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
பேஷன் ஷோ மற்றும் திரைப்பட விழாக்களில் நடிகைகள் மற்றும் மாடல்கள் விதவிதமாக வித்தியாசமாக உடை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்ப்பது என்பது வழக்கமான ஒன்று. ஒரு சில சமயங்களில் நீளமான உடை அனைத்து வருவதும் உண்டு. அந்த சமயங்களில் ஆடை தரையில் படாதவாறு தூக்கிப் பிடித்தபடி செல்வதற்காக பெண் உதவியாளர்கள் இருப்பார்கள்.
காஷ்மீர் பைல்ஸ் இயக்குநரின் கோபம் :
ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் அலுமினியம் மற்றும் கிரிஸ்டலில் வடிவமைக்கப்பட்ட நீளமான கவுன் அணிந்து ரெட் கார்பெட்டில் நடந்து வந்தார். அவரின் ஆடை தரையில் படாதபடி ஒரு ஆண் உதவியாளர் அதை பிடித்தவாறு பின்தொடரும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. இந்த புகைப்படத்தை பகிர்ந்த 'காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, 'காஸ்டியூம் அடிமைகள்' என் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பெரும்பாலும் பெண்கள் தான் இப்படி காஸ்டியூம் அடிமைகளாக இருப்பார்கள் ஆனால் இதில் ஒரு ஆண் உள்ளார். இப்படி பட்ட ஒரு பேஷனுக்காக ஏன் நாம் முட்டாள்களாக மாறுகிறோம்? ஐஸ்வர்யா ராய்க்கும் என்னுடைய இந்த கருத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நான் ஆடை அடிமைத்தனம் பற்றிய கருத்தை முன்வைக்கிறேன். ஐஸ்வர்யா ராய் ஒரு மாடல், பேஷன் தூதுவர் அவ்வளவு தான். அவர் இதற்கு பொறுப்பாக மாட்டார் என பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த கருத்து உண்மை தானே என் ஆமோதித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.