Kamal - A.R. Rahman: வாவ்! அமெரிக்காவில் ஆஸ்கர் மியூசியத்தில் அழகிய தருணம்: உலக நாயகனும் இசைப்புயலும்..! வைரலாகும் கிளிக்ஸ்
அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - கமல்ஹாசன் சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள சில இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதனோடு சேர்த்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பிளாஷ் பேக் காட்சிகளில் கமல்ஹாசன் இளமை தோற்றத்தில் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதற்காக டி - ஏஜிங் டெக்னீக் பயன்படுத்தி இளமையான தோற்றத்தில் காட்சி அளிப்பதற்கான பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து படத்தின் தற்போதைய நிலை பற்றி வெளிப்படுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசனின் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தை பார்வையிட சென்றுள்ளார். சென்ற இடத்தில் இசை புகழ் ஏ.ஆர். ரஹ்மான் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின்போது இரண்டு மாபெரும் ஜாம்பவான்களும் இணைந்து 'காட் ஃபாதர்' படத்தை பார்த்து ரசித்துள்ளனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்ற அந்த தருணம் குறித்த நினைவுகளை நடிகர் கமல்ஹாசனுடன் பகிர்ந்து கொண்டார். 2009ம் ஆண்டு வெளியான “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற ஆங்கில திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு லெஜெண்ட்ஸ் சந்தித்த அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்ற அந்த நொடிகளில் புகைப்படங்களை உலகநாயகன் கமல்ஹாசன் பார்வையிட்டதை நினைத்து ஏ.ஆர். ரஹ்மான் பூரிப்பது அவரது முகத்திலேயே தெரிகிறது, அவர் இந்த தருணத்தை ரசிக்கிறார் என்பது வெளியான புகைப்படங்கள் மூலம் வெளிப்படுகிறது.
மேலும் இந்த பயணத்தின் போது ஆஸ்கர் விருது பெற்ற மேக் அப் ஆர்ட்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார் கமல்ஹாசன். தனது நண்பரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து உரையாடியவர் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். கமல்ஹாசன் - மைக்கேல் வெஸ்ட்மோர் சந்திப்பின் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. மேலும் மைக்கேல் வெஸ்ட்மோர் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு, இந்தியன் 2 படத்தில் மேக் ஓவர் ஆர்டிஸ்டாக பணியாற்றியுள்ளார். அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இவர்கள் மீண்டும் இப்படத்தின் மூலம் கூட்டணி சேர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுல் ப்ரீத், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த், பிரியா பவனி ஷங்கர் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பொங்கல் ஸ்பெஷல் திரைப்படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.