நதியா முதல் கமல் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர்கள்..
கமல்ஹாசனைப் போலவே கோலிவுட் திரைப் பிரபலங்கள் சிலரும் தடுப்பூசி செலுத்திய பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கமல்ஹாசனைப் போலவே கோலிவுட் திரைப் பிரபலங்கள் சிலரும் தடுப்பூசி செலுத்திய பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக கமல் ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.
பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" எனப்பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாசப் பாதையில் தொற்றுள்ளது. தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவமனை அறிக்கை விடுத்திருந்தது. கமல்ஹாசனுக்கு கொரோனா என்பதைவிட அனைவரையும் ஆச்சர்யப்படவும், பயம் கொள்ளவும் வைத்த விஷயம், கமல் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் செலுத்தியவர் என்பது தான்.
கமல்ஹாசனைப் போலவே கோலிவுட் திரைப் பிரபலங்கள் சிலரும் தடுப்பூசி செலுத்திய பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களி விவரம் வருமாறு:
90ஸ் நதியா:
90களின் பிரபல ஹீரோயின், இப்போதும் இளமை ததும்ப அவ்வப்போது திரையில் எட்டிப்பார்க்கும் நடிகை நதியாவுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் கொரோனா வந்தது. நதியா கடந்த மே 2021ல் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுவிட்டார். ஆனால், அவருக்கு ஆகஸ்ட் 2021ல் கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய, கொரோனா தடுப்பூசியால் தான் நோயின் மோசமான தாக்கத்தில் இருந்து தப்பித்ததாகக் கூறினார்.
அழகுச் சிலை ஆண்ட்ரியா:
அழகுச் சிலை ஆண்ட்ரியா ஜெராமியா, நடிப்பு, பாட்டு என ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே வைத்திருப்பவர். கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் தொடங்கி அது குறித்த விழிப்புணர்வு பிரச்சார விளம்பரங்களில் அவர் நடித்து வந்தார். பெருந்தொற்று ஊரடங்கு காலத்தை சமாளிப்பது குறித்து அவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மே 2021ல் ஆண்ட்ரியாவுக்கு கொரோனா ஏற்பட்டது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருந்தார்.
அழகிய ராட்சஸி.. ஷெரீன்
அழகிய அசுரா அழகிய அசுரா என்று நம்மைக் கிறங்கவைத்த நடிகை ஷெரீன் ஸ்ரீநகரை கொரோனா பாதித்தது. ஷெரீன் மே 2021ல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன் பின், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று ஊக்குவித்து வந்தார். இருப்பினும் அவருக்கு ஆகஸ்டில் தொற்று ஏற்பட்டது. இரண்டாம் தவணைக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கு தொற்று பாதித்தது.
நதியா, ஆண்ட்ரியா, ஷெரீன் எல்லோரும் கொரோனா தடுப்பூசிக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே. ஆனால் அவர்கள் அனைவருமே சொல்வது தடுப்பூசி செலுத்தியதால் மட்டுமே தப்பித்தோம் என்பது. எனவே, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியும் கொரோனா வருகிறது. அதனால் தடுப்பூசி வேஸ்ட் என்ற தகவலைப் பரப்பாதீர்கள். தடுப்பூசி நோய் வராமலே தடுக்கும் என்று 100 சதவீதம் எந்த விஞ்ஞானியும் உறுதிபடக் கூறவில்லை. தடுப்பூசிக்குப் பின்னர் நோய் வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கோ அல்லது உயிர் பறிபோகும் அளவுக்கோ தீவிர பாதிப்பு ஏற்படாது என்பதே அறிஞர்கள் சொல்லும் கூற்று. எதையும் அறிவியல்பூர்வமாக அணுகுவோம்.