Kamalhassan: ‘ஹேராம்’ படம் இதற்காகத்தான் எடுத்தேன்.. கமல் விளக்கத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ராகுல்..!
நான் இப்போது காந்திஜியைப் பற்றி அதிகம் பேசுகிறேன். ஆனால் என்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் என் தந்தை ஒரு காங்கிரஸ்காரராக இருந்த போதும், நான் கடுமையாக காந்தியை விமர்சிக்க தொடங்கினேன்.
ஹேராம் படம் பற்றி ராகுல்காந்தியிடம் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கமளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கிய இப்பயணம் கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை கடந்து டெல்லியை அடைந்துள்ளது.
இதனிடையே டெல்லியில் டிசம்பர் 24 ஆம் தேதி தனது ராகுல் காந்தி தனது பயணத்தை தொடங்கிய நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. மேலும் அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், ராகுல் - கமல் இடையேயான உரையாடல் வீடியோ தற்போது ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் வலைத்தளப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
View this post on Instagram
அப்போது கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி புலி புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். உங்களின் வாழ்க்கை, அணுகுமுறை ஆகியவற்றை இந்த புகைப்படம் பிரதிபலிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த இந்தியர் என்பதையும், சிறந்த தமிழர் என்பதையும் இந்த படம் குறிக்கிறது எனவும் அந்த வீடியோவில் கமலிடம் ராகுல் விளக்கமளித்திருப்பார். இதனையடுத்து உரையாடலின் போது கமல்ஹாசன் மகாத்மா காந்தி குறித்து பேசுகிறார்.
நான் இப்போது காந்திஜியைப் பற்றி அதிகம் பேசுகிறேன். ஆனால் என்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் என் தந்தை ஒரு காங்கிரஸ்காரராக இருந்த போதும், நான் கடுமையாக காந்தியை விமர்சிக்க தொடங்கினேன். என் அப்பா ஒரு வழக்கறிஞராக இருந்த போது என்னிடம் வாதாட விரும்பவில்லை. மாறாக வரலாற்றை படிக்காமல் இன்றைய நிலைமையில் இருந்து பேசாதீர்கள் என்று மட்டுமே சொன்னார்.
எனக்கு 24 -25 ஆக இருக்கும் போது, நான் காந்தியை பற்றி அறிந்து கொண்டேன். அதன்பின்னர் நான் அவரின் ரசிகனாக அதிவேகமாக மாறிப்போனேன். “என் பாபுவிடம் (காந்தி) மன்னிப்பு கேட்க நினைத்தேன். அதனாலேயே ஹேராம் படம் உருவானது என கமல் தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத படம்
கடந்த 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் கதை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்த படம் ‘ஹேராம்’. மருதநாயகம் படம் எடுக்க முடிவு செய்த கமல், பட்ஜெட் காரணமாக அது முடியாமல் போக மீதமிருக்கும் பணத்தை கொண்டு ஹேராம் எடுத்தார்.
காந்தியை கொலை செய்ய முயலும் சாகேத் ராம், அவரது நடவடிக்கைகள் காரணமாக ஈர்க்கப்பட்டு எப்படி மனம் மாறுகிறார் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கமல் காட்டியிருப்பார். இது கமலின் வாழ்வில் நடந்த சம்பவம் என்பது கூடுதல் சிறப்பு. எதிர்பார்த்த வெற்றியை அப்படம் பெறவில்லை என்றாலும் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு படமாகவே இன்றளவு ஹேராம் உள்ளது.