தமிழ் சினிமாவை புரட்டி போடுவோம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.. உணர்ச்சிவசப்பட்ட கமல்
தக் லைஃப் படம் நாளை வெளியாகும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தமிழ் மக்களை மறக்கமாட்டேன் என பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட படக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கமல்ஹாசன் மணிரத்னம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும், தமிழக மக்கள் கொடுத்த ஆதரவிற்கும், தமிழுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
முக்கியமான திரைப்படம்
தக் லைஃப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் நாசர், "இதுவரை இவ்வளவு பெரிய ஊடகவியாளர்கள் கூட்டத்தை தமிழில் பார்த்தது இல்லை. உங்கள் அனைவரது எதிர்பார்ப்புக்கும் நன்றி. இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான படம். இந்த படத்தில் நான் இருப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. தமிழ் சினிமாவில் இது முக்கியமான படமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.
ஞானியாக மாறிய மணி
பின்பு பேசிய நடிகர் கமல்ஹாசன், “தமிழ் சினிமாவை புரட்டி போட வேண்டும் என்பது தான் ஆசை. நாங்கள் விரும்பும் திசை நோக்கி கொஞ்சம் நகர்த்தி பார்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். தக் லைஃப் படத்தின் மூலம் மணிரத்னம் சினிமா ஞானியாக மாறியுள்ளார். எனக்கு அவர் பட்டங்களை கொடுக்க ஆசைப்பட்டார். மணிரத்னத்துடன் 35 ஆண்டுகள் கழித்து பணியாற்றுவது குதூகலமாக இருந்தது. வெளிநாட்டு படங்களை பார்ப்பது போன்ற அனுபவத்தை தர முயற்சித்திருக்கிறோம். இப்படத்தில் சிறந்த கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள். மிகவும் ஒரு அற்புதமான படத்தை எடுத்துள்ளோம்.
உயிரே உடல் தமிழே
குறிப்பாக இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் மேடையில் பேசும்போது உயிரே உடல் தமிழே என்பதற்கான அர்த்தத்தை உணர்ந்துகொண்டேன். நாயகன் படத்தில் நாசர் நடிக்க வந்தபோது இருந்த அதே மனநிலையில் தான் அவர்களோடு தக் லைஃப் படத்தில் நடித்தேன். நாசருக்கும் மட்டும் அல்லை அனைத்து நடிகர்களுக்கும் புதுமையான உணர்வை தரும்” என்று உணர்ச்சி பொங்க கமல்ஹாசன் பேசி முடித்தார்.
முதல் நாள் மட்டும் அனுமதி
தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் மட்டும் ரூ.20 கோடி வரை சம்பாதித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் நாள் மட்டுமே சிறப்பு காட்சிக்கு அனுமதி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிடலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் கமல், சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், முதல் ஷோ காட்சி 9 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



















