Kaathal The Core: மம்மூட்டியுடன் பிரச்னை.. வசனங்களே இன்றி கவனம் ஈர்த்த ஜோதிகா.. ‘காதல் தி கோர்' ட்ரெய்லர் எப்படி?
20 வருட தம்பதியாக இருவரும் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஜோதிகா இந்த ட்ரெய்லரில் வசனங்கள் எதுவும் பேசாமல் உணர்வுகளைக் கடத்தியுள்ளது கவனமீர்த்துள்ளது.
மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'காதல் தி கோர்' (Kaathal The Core) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
காதல் தி கோர் ட்ரெய்லர்
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான மம்மூட்டியுடன் ஜோதிகா முதன்முறையாக திரையில் இணையும் திரைப்படம் காதல் தி கோர். இப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் ஜோதிகா 14 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ - எண்ட்ரி தருகிறார். மம்மூட்டியின் மம்மூட்டி கம்பெனி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மலையாள சினிமா தாண்டி கவனமீர்த்து வரவேற்பைப் பெற்ற 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தின் இயக்குநர் ஜியோ பேபி இப்படத்தை இயக்கியுள்ள நிலையில், சென்ற ஆண்டு தொடங்கி ஷூட்டிங் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டே இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது.
கவனமீர்த்த ஜோதிகா
இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி கவனமீர்த்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த மாத்யூ எனும் நபராக மம்மூட்டி நடிக்கும் நிலையில், அவரது மனைவியாக ஓமணா எனும் கதாபாத்திரத்தில் ஜோதிகா இப்படத்தில் நடித்துள்ளார். 20 வருட தம்பதியாக இருவரும் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஜோதிகா இந்த ட்ரெய்லரில் வசனங்கள் எதுவும் பேசாமல் உணர்வுகளைக் கடத்தியுள்ளது கவனமீர்த்துள்ளது.
மேலும் காதல் தி கோர் எனும் தலைப்புக்கேற்ப காதல், திருமண வாழ்வு, அதன் சிக்கல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நவம்பர் 23ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லைக்ஸ் அள்ளிய தீபாவளி பதிவு!
முன்னதாக தீபாவளியை ஒட்டி ஜோதிகாவுடன் சூர்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம் இணையத்தில் கவனமீர்த்து இதயங்களைப் பெற்றது. “வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமாக வாழ வேண்டும் என எங்களுக்கு காண்பித்ததற்கு நன்றி பொண்டாட்டி” என சூர்யா பகிர்ந்த கேப்ஷன் லைக்ஸ் அள்ளி வைரலானது.
தமிழ் சினிமாவில் தன் திருமணத்துக்குப் பின் சுமார் 5 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா, 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி தந்தார்.
தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் ஜோதிகா நடித்து வரும் நிலையில், இறுதியாக தமிழில் உடன்பிறப்பே எனும் படத்தில் நடிகர் சசிகுமாருடன் நடித்திருந்தார்.
மற்றொருபுறம் தன் கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி எண்டெர்ட்ய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள ஜோதிகா, சென்ற ஆண்டு தான் தயாரித்த சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். அடுத்ததாக இந்தியிலும் ஜோதிகா ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.