(Source: ECI/ABP News/ABP Majha)
அட்லிக்கு அடுத்த சோதனை: அதே புறா... அதே மேக்கிங்... விஜய் படங்களின் ‛காஃப்பியா’ ஷாரூக்கின் ஜவான்!
விஜய் படங்களை காஃபி அடித்து தான், ஜவான் படம் உருவானதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளனர். அதிலும் ஒரு சிலர், விஜய் படங்களே காஃப்பி தான், அதிலிருந்து மற்றொரு காஃபியா என்றும் கிண்டலடிக்கின்றனர்.
‛எங்க அண்ணனுக்கு நான் செய்யாம யாருடா செய்வா...’ என, பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் இட்லி பேசியதை, ஒரு வழியாக பிடித்துக் கொண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள், அட்லியை ஒரு வழியாக்கினர். ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, இயக்குனர் சங்கரின் பட்டறையிலிருந்து வந்தவர்.
தொடர்ந்து விஜய்க்கு, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்கள் கொடுத்து, விஜய்யின் அன்பை பெற்றவர். அவரது முதல் படமான ராஜா ராணியை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள், அதன் பின் என்ன ஆனதோ தெரியவில்லை, அட்லியை ‛காஃப்பி’ அடிக்கும் இயக்குனர் என திட்டித் தீர்க்க தொடங்கினர். ஆனாலும் ,அட்லி அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனக்கான படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.
சத்ரியன் படத்தை பட்டி டிங்கரிங் செய்து தெறி படத்தை எடுத்ததாகவும், அபூர்வ சகோதரர்கள் படத்தை பட்டி டிங்கரிங் செய்து மெர்சல் படம் எடுத்ததாகவும், ஜக்தே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு படங்களை பட்டி டிங்கரிங் செய்யாமல் நேரடியாக பிகில் படம் எடுத்ததாகவும் அட்லி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை, மீம்ஸ் கிரியேட்டர்கள் கொட்டத் தொடங்கினர். இன்றும், அட்லியை அப்படியே அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ‛போதும்டா... உங்க தமிழ் படம்... எதை எடுத்தாலும், ஏதாவது ஒரு மாதிரி இருப்பதாக ஓட்றீங்க’ என, முடிவு எடுத்தாரோ என்னவோ... இந்திக்கு தாவினார் அட்லி. பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாரூக்கான் படத்தை அட்லி இயக்குவதாக தகவல் வெளியானது. அப்போதும், அவரை விரட்டிச் சென்று விமர்சன அம்புகளை எய்தினர் மீம்ஸ் கிரியேட்டர்கள். ‛இன்னும் என்னெல்லாம் ஷாரூக் படத்துல வரப்போகுதோ....’ என, வெந்து கொட்டினர்.
இந்நிலையில் தான், ஜவான் என்கிற அந்த இந்தி படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் நேற்று வெளியானது. உடல் முழுக்க காயங்களுடன், முகத்திலிருந்து பெரும்பாலான பாகங்களில் கட்டு போட்டுக் கொண்டு, ஷாரூக் அமர்ந்திருப்பது போன்ற டீசர் அது. அதை தான், இப்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் பிடித்துக் கொண்டனர். ஷாரூக்கை காட்டிய வரை பிரச்சனை இல்லை; அந்த கும்மிருட்டு அறையில், புறா ஒன்று ஷாருக் உடன் ப்ரேம் ஃபை ப்ரேம் வருகிறது. இதற்கு முன், அட்லியின் படங்களிலும் புறா சென்டிமெண்ட் கட்டாயம் இருக்கும். குறிப்பாக மெர்சல் படத்தின் டீசரில் வரும் துவக்க காட்சியைப் போலவே, ஜவான் படத்தின் டீசரும் இருந்தது. அதிலும் புறா, இதிலும் புறா என பல ஒற்றுமைகள் அந்த டீசரில் இருந்தது.
இதை வைத்து, விஜய் படங்களை காஃபி அடித்து தான், ஜவான் படம் உருவானதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளனர். அதிலும் ஒரு சிலர், விஜய் படங்களே காஃப்பி தான், அதிலிருந்து மற்றொரு காஃபியா என்றும் கிண்டலடிக்கின்றனர். கதைகளை காஃப்பி அடிப்பது வேறு, காட்சிகளை காஃப்பி அடிப்பது வேறு; அட்லி, தன்னுடைய ட்ரைலரில் வரும் காட்சிகளை தொடர்ந்து காஃப்பி அடிக்கிறார் என்கின்றனர் விமர்சகர்கள்.
மெர்சல் மட்டுமல்ல, பிகில் படத்தில் விஜய் பைக்கில் போகும் காட்சியில் புறா கூட்டங்கள் பறக்கும். இப்படி, தனது படத்தின் ட்ரெய்லர்களின் புறாக்களை பயன்படுத்தும் சென்டிமெண்டை தொடர்ந்து வரும் அட்லி, அதை ஷாரூக் படத்திலும் தொடர்கிறார். மொத்தத்திற்கு அந்த டீசரில் இரு கதாபாத்திரங்கள் தான் வருகிறது. ஒன்று ஷாரூக், மற்றொன்று புறா. ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா...!