Jai Bhim Movie: ஜெய் பீம் படத்தின் சாதனை.... ஐஎம்டிபியில் முதலிடம் பிடித்தது!
ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ஐஎம்டிபி உலகளவில் புகழ் பெற்ற இணையங்களில் ஒன்றாகும்.
சூர்யா, மணிகண்டன், லிஜோமோல், பிரகாஷ் ராஜ் நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கியிருக்கும் படம் ஜெய் பீம். ஜோதிகா&சூர்யா தயாரிப்பில் உருவான இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
முதனை கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அடித்து கொன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான ஜெய் பீம் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ராஜாக்கண்ணு மரணத்திற்கு நீதி பெற்று தந்த நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.
ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை லாக் அப் டெத்தை மையமாக வைத்து வெளியாகியிருந்தாலும் ஜெய் பீம் படம் இன்னமும் ஆழமாக அதனை பேசியிருக்கிறது. குறிப்பாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் இருளர் இன மக்களின் வாழ்வியலை வலியோடு காட்சிப்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் இந்தப் படத்தை கொண்டாடினர். ஜெய் பீம் படத்திற்கு பிறகு வெளியான அண்ணாத்த, எனிமி படங்களைவிட இப்படத்தை ரசிகர்கள் உச்சி முகர்ந்தனர்.
இந்நிலையில் ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ஐஎம்டிபி உலகளவில் புகழ் பெற்ற இணையங்களில் ஒன்றாகும்.
இந்த இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். இதில் அதிக புள்ளிகளைப் பெற்ற படமாக 'தி ஷஷாங் ரிடம்ஷன்' இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'டார்க் நைட்', '12 ஆங்கிரி மேன்' உள்ளிட்ட பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் '3 இடியட்ஸ்', 'தாரே ஜமீன் பர்', 'லகான்', 'தங்கல்', 'அந்தாதூன்' உள்ளிட்ட சில பாலிவுட் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. முதல் 250 படங்கள் பட்டியலில் எந்தவொரு தமிழ் படமும் இதுவரை இடம்பெற்றதில்லை.
தற்போது முதல்முறையாக ஐஎம்டிபி பட்டியலில் ஜெய் பீம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம். 53,000 வாக்குகள் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பின் 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
'தி ஷஷாங் ரிடம்ஷன்' படத்துக்கு 24 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. ஆனால், 'ஜெய் பீம்' படத்துக்கு 53,000 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இருப்பினும் வரும் காலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்