இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா...ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் பரிசு
Ilaiyaraaja : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற இருக்கிறது

இளையராஜாவுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடக்கவுள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்துகொள்ளும் இவ்விழாவில் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சியும் இந்த விழாவில் நடைபெற இருக்கிறது.
'அன்னக்கிளி'யில் அறிமுகம்
தன் அண்ணன் வைத்திருந்த பாவலர் இசைக்குழுவில் இசையமைத்து வந்தவர் இளையராஜா. தாயார் விரும்பி வைத்திருந்த ரேடியோவை விற்ற பணத்துடன், தன் சகோதரர்களுடன் சேர்ந்து சென்னை வந்தார்.பின்னர் வாய்ப்பு தேடி பல இடங்களில் சுற்றினார். அப்போது இயக்குனர் தேவராஜ் மோகன் இயக்கிய, சிவக்குமார் – சுஜாதா நடித்த ‘அன்னக்கிளி’ (1976) படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் பாடல்கள் – அன்னக்கிளி, மச்சானை பாத்தீங்களா, அடி ராக்காயி – பெரும் வரவேற்பைப் பெற்றன.
50 ஆண்டு இசை வாழ்க்கை
அந்த வருடமே நான்கு படங்களுக்கு இசையமைத்தார். பின்னர், அவர் அமைத்த பாடல்கள் நகரம் முதல் கிராமம் வரை பரவியது. ஒரே வருடத்தில் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த காலமும் இருந்தது. எம்.ஜி.ஆர் முதல் விஜய் சேதுபதி, விக்ரம் வரை நான்கு தலைமுறையிலான நாயகர்களுக்காக பாடல்கள் அமைத்துள்ளார்.
விருதுகள்
அவரது பங்களிப்புக்காக 2010-இல் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண்வும், 2018-இல் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண்வும் வழங்கப்பட்டது. மேலும், தேசிய விருதை ஐந்து முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பனி இசை
தனது 82 ஆவது வயதில் 'வேலியன்' என்கிற தனது முதல் சிம்பனி இசையை உருவாக்கினார் இளையராஜா. கடந்த மார்ச் மாதம் இந்த சிம்பனி இசை லண்டனில் அரங்கேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே இசைக்குழுவுடன் இந்த சிம்பனி இசையை தமிழ்நாட்டில் நிகழ்த்த இருக்கிறார்.





















