முதலில் இந்தியன் 2 இப்போது தக் லைஃப்...மீண்டும் சறுக்கியதா கமலின் கிளாசிக் கூட்டணி ?
இந்தியன் 2 படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய கமல் தக் லைஃப் படத்தில் நாயகன் படம் மீதான எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தாரா ?

தக் லைஃப் விமர்சனம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சிம்பு , த்ரிஷா , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏஅர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெளி நாடுகளில் தக் லைஃப் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் முடிவுக்கு வந்து படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா தக் லைஃப் என்பதே கேள்வி
தக் லைஃப் கதை
தக் லைஃப் டிரைலர் என்ன கதை காட்டப்பட்டதோ அதேதான் படத்தின் முழு கதையும். தந்தை மகனான சிம்பு கமல் இடையிலான அதிகார மோதலே படத்தின் மையக் கதை. இன்றைய டிரெண்டிற்கு ஏற்றது மாதிரி இல்லாமல் மணிரத்னம் இந்த படத்தை தனது வழக்கமான நிதானத்துடன் கதையை சொல்கிறார். ஏற்கனவே இதே போன்ற கதையை செக்கச் சிவந்த வானம் படத்திலும் கையாண்டிருப்பதால் அந்த படத்தின் சாயல் அங்கங்கு தெரிவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பொறுமையாக செல்லும் முதல் பாதி சுவாரஸ்யமான இடைவேளையில் முடிகிறது. இரண்டாவது பாதியிலும் கதை பெரியளவில் வேகமெடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்ற அளித்துள்ளது என்று சொல்லலாம்.
நடிப்பு எப்படி ?
கமல் மற்றும் சிம்பு இடையில் முக்கியமான காட்சிகள் அமைந்துள்ளன. இருவரது நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்றாலும் மற்ற நடிகர்களுக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏமாற்றம் அளித்துள்ளது. அதே நேரம் தக் லைஃப் படத்தின் கதையும் கமலின் முந்தைய படமான விக்ரம் படத்தின் கதையும் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். யூகிக்கக் கூடிய கதை படத்தில் சுவாரஸ்யத்தை குறைப்பதாக பலர் கூறியுள்ளார்கள்
முதலில் இந்தியன் 2 இப்போது தக் லைஃப்?
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் பெரியளவில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் தற்போது கிளாசிக் திரைப்படமான நாயகன் படத்தைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் படம் தக் லைஃப். நாயகன் படம் ரசிகர்களிடம் உருவாக்கிய அந்த எதிர்பார்ப்பை தக் லைஃப் திரைப்படம் திருப்தி செய்ததா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்





















