கல்கியின் பொன்னியின் செல்வன் வேற மாதிரி.. திரைப்படம் மணியின் ஓவியம் - இளையராஜா
Ilaiyaraaja on Mani Ratnam’s Ponniyin Selvan: ’பொன்னியன் செல்வன்’ திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ’பொன்னியன் செல்வன்’ திரைப்படம் நாவல் போல இல்லை என இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் கல்கியின் வரலாற்று சிறப்பு மிக்க நாவலான ‘ பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி திரைப்படமாக்கப்பட்டது பொன்னியின் செல்வன் -1 , பொன்னியின் செல்வன் -2. நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், ஐஷ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர். வராற்று சிறப்புமிக்க நாவலின் தழுவல் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திரைப்படம் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.
இந்நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கல்கியின் எழுத்தும், பொன்னியின் செல்வன் நாவலும் அவரின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்ட அவர் திரைப்படம் பற்றி கூறுகையில், ”பொன்னியின் செல்வம் திரைப்படத்தில் பொன்னியின் செல்வனை பார்ப்பது போலவேயில்லை; வந்திய தேவன், குந்தவை என எல்லாமும் மணியன் சார் வரைந்த ஓவியங்கள் மட்டுமே என் கண் முன் வந்ததே தவிர.. எனக்கு பொன்னியின் செல்வனை பார்க்கிற மாதிரி இல்லை. நான் குறை சொல்கிறேன்னு நினைக்க வேண்டாம். கல்கியின் பொன்னியின் செல்வன் என்னுள் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இளம் வயதில் பொன்னியின் செல்வன் நாவலை எவ்வளவு முறை படித்திருக்கேன் என்று எனக்கே தெரியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா தனது இளம் வயதில் புத்தகம் வாசிப்பு குறித்து பேசுகையில்,” நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்துதான் நண்பர்கள் வாசிப்போம். நான், பாரதிராஜா, பாஸ்கர் என எங்களுக்குள் போட்டி இருக்கும். ஆர்வத்துடன் படிப்போம். நூலகத்தில் போட்டிபோட்டு புத்தகம் எடுப்போம். 5 பாகங்களில் யாரிடம் எது இருக்கிறது என்றே தெரியாது. தேடும்போதுதான் தெரியும்; இது உன்கிட்ட இருக்கான்னு..அப்படி படிப்போம். கல்கியின் எழுத்துக்கள் என் கற்பனை உலகில் நான் பறக்க ஊக்கமாக இருந்தது. எனக்கு ஆசிரியராக, குருவாக இருந்தது கல்கி. அவருடைய ஜோக்ஸ்.. அவரின் நகைச்சுவை உணர்வு இதெல்லாம் தான் என்னை கற்பனை உலகில் மிதக்க வைத்தது.” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
நான் ஞானி கிடையாது! - ஓபனாக பேசிய இளையராஜா
நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டவன் எல்லாம் இல்லை. நான் இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என கேட்டால் அதுவே கேள்விக்குறிதான். மக்கள் என்னை அப்படி அழைக்கிறார்கள். அதற்காக நன்றி, நான் என் கர்வத்தை எல்லாம் சின்ன வயதிலேயே தூக்கி எறிந்து விட்டேன். என் அண்ணனோட கச்சேரி வாசிக்கிற நேரத்துல மக்களின் கைதட்டலை பார்த்து பெருமையா இருந்தது. அதனால் நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். கைத்தட்டல் அதிகரிக்க அதிகரிக்க என் கர்வமும் அதிகரிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்த கைதட்டல் எல்லாம் எதுக்கு கிடைக்கிறது என கேள்வி எழுந்தது. இசைக்காக தான் கிடைக்கிறது.
நான் பிரபலமான சினிமா பாடல்களை வாசிப்பேன். அதனை யார் இசையமைத்தார் என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போ பாராட்டு எல்லாம் அவருக்கு தான் போகிறது என நினைக்கையில் கர்வம் போய் விட்டது. அதனால் எந்த புகழும், பாராட்டும் என்னை ஒட்டாது. அதில் எனக்கு சிந்தனையும் கிடையாது.நான் ஒரு நாளைக்கு 3 பாடல்கள் பதிவு செய்வேன். 3 நாட்களில் 3 படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளேன். இது என்னுடைய திறமையை சொல்வதற்காக சொல்லவில்லை. அப்படி இசையமைத்தவர்கள் இந்த உலகத்திலேயே கிடையாது. படக்குழுவினரின் நெருக்கடி அப்படி இருந்தது” என இளையராஜா தெரிவித்துள்ளார்.