Holy wound: லெஸ்பியன் காதலை நிராகரிக்கிறதா கேரளம்? ஹோலி ஊண்ட் ட்ரைலரால் சர்ச்சை!
தற்போது மலையாளத்தில் வெளிவர உள்ள திரைப்படம் 'ஹோலி வூண்ட்'. இந்த திரைப்படம் லெஸ்பியன் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.இத்திரைப்படத்தை இயக்குநர் அசோக்.ஆர்.நாத் இயக்கியுள்ளார்.
சமூகத்தில் நிகழும் மாற்றங்களில் பெரும் பங்கு சினிமாக்களுக்கு உண்டு. அப்படி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோராக சித்தரிக்கப்படும் எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு எனலாம். இந்த வகையில் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள் எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் இன்னல்கள் குறித்தும் எல்.ஜி.பி.டி சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உருவானது பாராட்டிற்குரியது. இந்த பட்டியலில் தமிழ் திரைப்படங்களான திட்டம் இரண்டு, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் அடங்கும்.
'ஹோலி வூண்ட்' :
தற்போது மலையாளத்தில் வெளிவர உள்ள திரைப்படம் 'ஹோலி வூண்ட்' (Holy Wound). இந்த திரைப்படம் லெஸ்பியன் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.இத்திரைப்படத்தை இயக்குநர் அசோக்.ஆர்.நாத் இயக்கியுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குநர்களின் படங்களையும் வேறு கோணத்தில் எடுக்கப்படும் படங்களையும் எப்போதும் வரவேற்கும் தளமாக ஓடிடி தளங்கள் இருக்கின்றன. அதிலும் வாரத்திற்கு இரண்டு மலையாள படங்களாவது ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும். இந்த படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் ஆகிய இருவரும் லெஸ்பியன் தோழிகளாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சினிமா வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரைலர் சர்ச்சை :
ஹோலி வூண்ட் (புனித காயம்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரைலரில் இரண்டு பெண்கள் முத்தமிடும் காட்சிகளும், அவர்கள் இருவரும் அவர்களின் தற்போதைய வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.இந்த இரண்டு பெண்களில் ஒருவர் கிறிஸ்துவ கன்னியாஸ்திரியாகவும் இன்னொருவர் இல்லத்தரசியாகவும் இருப்பது போல் தெரிகிறது. மேலும் முன்னதாகவே இவர்கள் இருவரின் காதலும் இருந்துள்ளதாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்கள் இருவரும் வேறு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க நேர்ந்தது போல் தோன்றுகிறது.
தொடர்ந்து எழும் எதிர்ப்புகள்:
கிறிஸ்தவ சமூகத்தினர் இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எல்.ஜி.பி.டி காதலை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத பலர், இந்த ட்ரெய்லருக்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு எதிர்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னொரு புறத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த படம் லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களுக்கும், தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கும் சமர்ப்பணமான படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கிறது.
முன்னதாக கேரளா எர்ணாகுளத்தைச் சேர்ந்த லெஸ்பியன் ஜோடிகள் ஹை கோர்ட் வரை சென்று அவர்கள் சேர்ந்து வாழும் உரிமம் பெற்றது கேரளத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அந்த சம்பவத்துடன் இந்த திரைப்படம் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்