Rajini Negative Roles: கெட்டப்பய சார் இந்த காளி..! ரஜினியை சூப்பர் ஸ்டாராக மாற்றிய வில்லத்தனம்..!
ரஜினி எனும் கலைஞன் தன்னை அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டது, தனது கேரக்டரின் நெகடிவ் சேடுகளில்தான். அதற்கு உதாரணமாக நாம் ரஜினியின் பல படங்களை சொல்லலாம்..!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இன்று தனது 72 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சினிமாவில் 46 ஆண்டு கால இருப்பை தனது உழைப்பின் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கும் ரஜினியின் ராஜபாட்டை என்பது அவரது ஸ்டைலால் மட்டும் சாத்தியப்படவில்லை.
அதையும் தாண்டி அவருக்குள் இருக்கும் ஒன்றுதான் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. ஆம் அது அவருக்குள் ஊறிக்கிடக்கும் வில்லத்தனம். ரஜினி எனும் கலைஞன் தன்னை அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டது, தனது கேரக்டரின் நெகடிவ் சேடுகளில்தான். அதற்கு உதாரணமாக நாம் ரஜினியின் பல படங்களை சொல்ல முடியும்.
தமிழ் சினிமாவில் ரஜினி வில்லனாக அறிமுகமான படமாக மூன்று முடிச்சை சொல்லலாம். ஸ்ரீ தேவியை ஒரு தலையாக காதலிக்கும் ரஜினி, ஸ்ரீதேவியை கையாளும் விதமும், அப்போது அவர் வெளிப்படுத்தும் மேனரிசங்களும் ‘யாருப்பா இந்த பையன்.. இப்படி நடிக்கிறான்’ என்று கேட்க வைத்தது.
அடுத்து வந்த பாலச்சந்தரின் கிளாசிக் படமான ‘அவர்கள்’படத்திலும் அது தொடர்ந்தது. சூழ்நிலைகளால் தனது காதலன் கமலை பிரியும் சுஜாதா, ஒருக்கட்டத்தில் ரஜினியை
திருமணம் செய்து கொள்கிறார். கமலுடனான காதலை முன்னமே தெரிந்திருக்கும் ரஜினி சுஜாதாவை சந்தேகப்படும் சேடிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். காட்சிக் காட்சி ரஜினி அவருக்கே உண்டான பாணியில் அனலைக் கக்கியிருந்த விதம் ரஜினியை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றது.
ரஜினியின் சினிமா வாழ்கையை திருப்பிப் போட்ட படம் என்றால் அது 16 வயதினிலே.. சப்பாணியாக ஒரு பக்கம் கமல் என்றால் பெர்பாமன்ஸில் மிரட்ட, இந்தப் பக்கம் பரட்டை வந்த ரஜினி பரட்டை தலையுடன் ஒற்றை பீடியை வைத்துக் கொண்டு மாஸ் காட்டியிருப்பார்.
படத்தின் நாயகன் கமல்தான் என்றாலும், ‘இது எப்படி இருக்கு’ என்ற ஒற்றை வசனத்தை உச்சரித்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் ரஜினி. திரையரங்கை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் அனைவரும் ரஜினியின் வசனத்தை முணுமுணுத்துக்கொண்டுதான் வெளியே வந்தனர். இதற்கு அடுத்ததாக வந்த ஆடு புலி ஆட்டம் படத்திலும் ‘ அதான் ரஜினி ஸ்டைல்’ என்ற பஞ்ச் வசனத்தை வைத்து மாஸ் காட்டியிருப்பார் ரஜினி..
அதற்கு பிறகான காலங்களில் வில்லன் வேடத்தை தவிர்த்து, கதாநாயகனாக ரஜினி நடித்தாலும், அவரது ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் ஒருவில்லத்தனம் ஒளிந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும்.. அதற்கு உதாரணங்களாக ரஜினியின் தீ, பில்லா, பொல்லாதவன் உள்ளிட்டப்படங்களை சொல்லலாம். நெற்றிக்கண் படத்தில் காமத்துக்கு அடிமையான முதியவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினி அந்தக் கதாபாத்திரத்தை தனது வில்லத்தனத்தால் அநாயசமாக கையாண்டிருப்பார்.
அதே போல மூன்று முகம் படத்தில் இடம் பெற்ற அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரமும் அப்படியானதே.. போலீஸ் கதாபாத்திரத்தில் கன்னம் உப்பி, மிடுக்காக வரும் ரஜினி மிரட்டலின் உச்சமாக வருவார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், செந்தாமரையிடம் ‘தீப் பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசினால்தான் தீப் பிடிக்கும் ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீப் பிடிக்கும்’ என்று அவர் பேசும் வசனங்களெல்லாம் எகிடுதகிடு ஹிட் ரகம்.
அவரது சினிமா கேரியரில் மாஸ் ஹிட்டடித்த படம் என்றால் அது பாட்ஷா.. அதுவும் அவரது வில்லத்தனமான நடிப்பினாலேயே கொண்டாடப்பட்டது. ரஜினியின் நடையில் அதிரவைக்கும் ஷூ சத்தம், இறுக்கமான முகம் என மாணிக் பாட்ஷாவாக அவர் திரையில் காண்பித்திருந்த வில்லத்தனம் அரங்கையே வைத்தது என்று சொல்லலாம். அண்ணாமலையிலும் அசோக்கிற்கு வில்லனமாக மாறும் ரஜினி மேனரிசங்களில் அதகளப்படுத்தியிருப்பார்.
பாபா மிகப் பெரிய தோல்வி சந்தித்த தருணம்.. வயதாகி விட்டது.. வீட்டில் உட்கார வேண்டியதுதானே உள்ளிட்ட விமர்சனங்கள் ரஜினியை நோக்கி வர ஆரம்பித்தன. அடுத்ததாக மிகப் பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டிய நெருக்கடி.. அப்போது ரஜினி கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் வில்லத்தனம் தான். வேட்டையனாக.. ‘லக்க லக்க லக்க லக்க லக்க’ அவர் திரையில் துள்ளிக்குதிக்கும் குதிரையாக காட்டிய அவர் வில்லத்தனம் படத்தை பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடிக்க வைத்தது.
சிவாஜி படத்திலும் சிங்கப்பாதையை தேர்ந்தெடுக்கும் சிவாஜி காட்டும் வில்லத்தனம்தான் படத்தை தாறுமாறு ஹிட்டடிக்க வைத்தது.. ஆதிகேசவனுடன் கண்களை உயர்த்தி பேசுவதாகட்டும், ஆஃபிஸ் ரூமில் அதிகாரிகளை தவிடுபொடியாக்கி பார்க்கும் காட்சிகளாட்டும் அனைத்தும் அவர் படத்தில் சொல்வது சும்மா அதிரவைத்தது. அடுத்து வந்த எந்திரன் படத்தில் சிட்டி கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி, இடைவேளைக்குப் பிறகு முழுக்க முழுக்க வில்லனாக மாறுவார். வில்லனாக அவர் நகர்த்தும் ஒவ்வொரு காட்சிகளும் திரையில் அப்படி இருந்தன..
இவ்வளவு ஏன் அண்மையில் வெளியான தர்பார் ஒரு வில்லத்தனமான போலீஸ் கதாபாத்திரத்திலும் அதே வில்லத்தனம் இருந்ததை நம்மால் பார்க்க முடியும். இப்படி ரஜினியை சூப்பர் ஸ்டாராக ஆக்கியதில் அவருக்குள் இருக்கும் வில்லத்தனத்திற்கு அவ்வளவு பங்கு இருக்கிறது. இப்போதுள்ள நடிகர்கள் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாவதை விட, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகின்றனர். ஆனால் அதை அப்போதே செய்து விட்டார் ரஜினி.. அங்குதான் நிற்கிறார் ரஜினிகாந்த் எனும் ராஜபாட்டை. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்