Gift - First look: அட இது புதுசா இருக்கே! வெளியானது இளையராஜாவின் கிஃப்ட் 'பர்ஸ்ட் லுக்': குவியும் லைக்ஸ்!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கிஃப்ட் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜாவின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் இசை வீடியோவாக வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ஒரு சில இயக்குநர்கள் அவர்களின் திறமையால் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். அந்த வகையில் தொழில்நுட்பம் மற்றும் திரை மொழி என எந்த ஒரு அடிப்படையானாலும் கவனத்தை ஈர்த்து அசத்தும் இயக்குநர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன்.
‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்ட்’ உள்ளத்திற் படங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநரானார் அல்போன்ஸ் புத்திரன்.
நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த 'பிரேமம்' திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஒரு வெற்றி பெற்றது. அதன் வெற்றி இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கொடுத்து முன்னணி இடத்தில் தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இன்றளவும் இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
அதை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோல்டு' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு எதிர்பார்த்த வெற்றியையும் பெற தவறியது.
அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்திற்கு 'கிஃப்ட்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
'கிஃப்ட்' படத்தின் படக்குழுவினர் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையின் ஃபர்ஸ்ட் லுக் இசையை ஒரு வித்தியாசமான வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான வியூஸ்களை அள்ளிவிட்டது.
இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற விளம்பரத்தை அடுத்து நூற்றுக்கணக்கானோர் ஆடிசனுக்காக படையெடுத்தனர். 7 நாட்கள் நடைபெற்ற இந்த அடிஷனில் 15 வயதிலிருந்து 55 வயது வரை உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் இருந்து வருகிறது.
கோல்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் நேரடியாக தமிழ் படம் ஒன்றை இயக்கி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நேரடியாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகிறது 'கிஃப்ட்' திரைப்படம். இந்த ஆண்டு இறுதியில் 'கிஃப்ட்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பிரேமம் போல ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என அல்போன்ஸ் புத்திரன் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.