மூளை அறுவை சிகிச்சை.. பக்கவாதம்.. கடந்து வந்த பாதை குறித்து பேசிய 'கேம் ஆஃப் தோர்ன்ஸ்' நாயகி!
கேம் ஆஃப் தார்ன்ஸ் ஹீரோயின் எமீலியா கிளார்க் தனது மூளை அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தான் எப்படி உணர்கிறேன் என்பதை மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். எமிலீயாவுக்கு இரண்டு முறை அன்யூரிஸம் ஏற்பட்டது.
கேம் ஆஃப் தார்ன்ஸ் ஹீரோயின் எமீலியா கிளார்க் தனது மூளை அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தான் எப்படி உணர்கிறேன் என்பதை மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். எமிலீயாவுக்கு இரண்டு முறை அன்யூரிஸம் ஏற்பட்டது. இதனால் 2011 மற்றும் 2013ல் அவர் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அன்யூரிஸம் என்பது மூளை ரத்தக் குழாய் வீங்கிக் கொள்ளும் நோய். இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டு வந்தது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை.
இது குறித்து அவர் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் 35 வயது நிரம்பிய எமீலியா கிளார்க் , "எனக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. எனது மூளையின் சிறு பகுதி பயனற்றதாக உள்ளது. அப்படியிருந்தும் என்னால் சரியாக பேச முடிகிறது. சில நேரங்களில் வெகு கோர்வையாக பேசுகிறேன். இந்த இயல்பே மிகவும் ஆசிர்வாதமானது. இத்தனை பெரிய அறுவை சிகிச்சைகளுக்கும் பிறகு நான் இயல்பாக இருக்கிறேன். உலகில் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் இயல்பாக இயங்கக் கூடியவர் மிக மிக மிக அரிது என்றே மருத்துவ உலகம் கூறுகின்றது. சில நேரங்களில் இதை நினைத்து நான் சிரித்துக் கொள்வதும் உண்டு.
ஏனெனில் ஸ்ட்ரோக் என்பது மூளையை கடுமையாக பாதிக்கக் கூடியது. ஒரு சில மைக்ரோ விநாடிகளுக்கு ரத்த ஓட்டம் மூளையில் சீராக இல்லாவிட்டாலும் கூட மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும். அந்த மைக்ரோ விநாடிகளுக்குள் மூளையின் ரத்த ஓட்டம் மாற்று வழியில் நடந்திருக்கும். ஆனால் ரத்தம் பாயாத அந்தப் பகுதி போனது போனதுதான். தி சீகல் தழுவி உருவாகும் புதிய ப்ளேயில் நான் எதையும் மிஸ் செய்யாமல் நடிக்க முடிகிறது. அந்த அளவுக்கு எனது நினைவாற்றல் சிறப்பாகவே இருக்கிறது.
எனக்கு இரண்டாவது முறை பிரச்னை ஏற்பட்டபோது மூளையில் ரத்தக் கசிவு அதிகமாகவே இருந்தது. நான் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என மருத்துவர்கள் கூறினர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாலும் சொற்ப வாய்ப்பே என்றே கூறினர். அந்த தருணம் என்னைச் சுற்றியவர்களுக்கு மோசமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் எல்லாவற்றையும் கடந்து வந்துள்ளேன். அதனாலேயே நான் SameYou என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன். இதன் மூலம் என்னைப் போன்று மூளை அறுவைசிகிச்சை அல்லது பக்கவாதத்தில் இருந்து மீண்டோருக்கு உதவி வருகிறேன்"
இவ்வாறு எமீலியா கிளார்க் கூறியிருக்கிறார்.
உலகப் புகழ் பெற்ற சீரிஸின் பின்னணி:
கேம் ஆஃப் தார்ன்ஸ் வெப் சீரிஸ் 2K கிட்ஸிற்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சி. கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) என்பது 2011 முதல் 2019 வரை எச்பிஓ என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கற்பனை கலந்த சரித்திர தொடர். அமெரிக்க தொலைக்கட்சியில் பிரபலமாகி மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இது ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்என்பவரால் எழுதப்பட்ட எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் என்ற நாவலை தழுவி டேவிட் பெனியோஃப் மற்றும் டி. பி. வேய்ஸ் என்பவர்களால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தொடர் 59 பிரைம் டைம் எம்மி விருதுகளைப் பெற்றது, இது 2015, 2016, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சிறந்த நாடகத் தொடர் உட்பட ஒரு நாடகத் தொடரால் வழங்கப்பட்டது. இதன் பிற விருதுகள் மற்றும் பரிந்துரைகளில் சிறந்த நாடக விளக்கக்காட்சிக்கான மூன்று ஹ்யூகோ விருதுகள், ஒரு பீபோடி விருது மற்றும் ஐந்து பரிந்துரைகள் ஆகியவை அடங்கும் மேலும் சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான கோல்டன் குளோப் விருது - நாடகம். பல விமர்சகர்கள் மற்றும் வெளியீடுகள் இந்த நிகழ்ச்சியை எல்லா காலத்திலும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக பெயரிட்டுள்ளன.