(Source: ECI/ABP News/ABP Majha)
Nagma: ரஜினி படத்தில் நடிக்க முடியாது.. முரண்டு பிடித்த நக்மா.. அதுவும் எதற்கு தெரியுமா?
1995 ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், விஜயகுமார், ஜனகராஜ், தேவன் என பலரின் நடிப்பில் வெளியான படம் “பாட்ஷா”.
நடிகை நக்மா பாட்ஷா படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க மாட்டேன் என அடம் பிடித்த சம்பவங்களை நேர்காணல் ஒன்றில் டப்பிங் கலைஞர் அனுராதா பகிர்ந்துள்ளார்.
பாட்ஷா படம்
1995 ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், விஜயகுமார், ஜனகராஜ், தேவன் என பலரின் நடிப்பில் வெளியான படம் “பாட்ஷா”. தேவா இசையமைத்த இந்த படம் நடிகர் ரஜினியின் திரையுலக இமேஜை மாற்றியது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தில் சில எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்துள்ளது. அதனை பற்றி டப்பிங் கலைஞர் அனுராதா நேர்காணலில் பேசியுள்ளார்.
நக்மாவுக்கு டப்பிங்
நான் இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் தான் பிரபலமானேன். இதனால் நிறைய விளம்பரங்கள் பண்ணினேன். அந்த மாதிரி நிறைய படங்கள் நான் மிஸ் பண்ணிருக்கேன். குறிப்பாக பாட்ஷா படத்தில் நக்மாவுக்கு நான் தான் டப்பிங் பேசினேன். அதுவும் நிறைய சவால்களுக்கு நடுவில் தான் நடந்தது. கிட்டதட்ட பாதிபடம் முடிந்து போச்சு. நக்மாவுக்கு முன்னதாக காதலன் படம் வெளியாகி சிறப்பாக ஓடியது. அந்த படத்தில் நடிகை சரிதா தான் டப்பிங் பேசியிருப்பார். அதனால் பாட்ஷா படத்துக்கும் சரிதாவையே நக்மா பரிந்துரை செய்திருந்தார். ஆனால் படத்தை எப்படியாவது முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நெருக்கடி ஏற்படுகிறது. நான் சுரேஷ் கிருஷ்ணா படத்தில் டப்பிங் பேசியிருக்கிறேன். அதனால் அவர் என்னை போனில் அழைத்து, ‘நேரம் இல்லை. எங்கே இருந்தாலும் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வாம்மா’என அழைக்கிறார்.
நடிக்க மறுத்தார்
நான் அப்போது சரத்குமார் படத்தில் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒரு மணி நேரம் பெர்மிஷன் கேட்டுவிட்டு பாட்ஷா படத்துக்கு டப்பிங் பேச சென்றேன். என்னை வைத்து வாய்ஸ் டெஸ்ட் பண்ணினார்கள். தயாரிப்பாளர் வீரப்பன், நடிகர் ரஜினி எல்லாம் ஓகே சொல்லி விட்டு சென்று விட்டார்கள். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தேவா மட்டும் இருந்தார்கள். கிட்டதட்ட 6வது ரிலீல் அழகு பாடல் வரும் வரை நக்மாவுக்கு டப்பிங் பேசிவிட்டேன். ஆனால் அதற்குள் விஷயம் எப்படியோ நக்மாவுக்கு தெரிந்து விட்டது.
அவர் ஆர்.எம்.வீரப்பன் சாருக்கு போன் பண்ணி ஏன் சரிதாவை ஒப்பந்தம் செய்யவில்லை என கேட்டுள்ளார். அதற்கு சரிதாவுக்கு ஏதோ குடும்ப பிரச்சினை. எனக்கு படம் முடித்தாக வேண்டும். உன்னுடைய பகுதிகள் மட்டும் டப்பிங் பணிகள் இருக்கிறது என ஆர்.எம்.வீரப்பன் பதிலளித்துள்ளார். ஆனால் நக்மாவோ பிடிவாதமாக காதலன் படத்துக்கு டப்பிங் பேசி ஒர்க் அவுட் ஆனதால் சரிதா இருந்தால் நன்றாக இருக்கும் செண்டிமெண்ட் பேசினார் நக்மா.
பண ரீதியான விஷயம் என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன். சரிதாவை நீங்கள் புக் செய்யவில்லை என்றால் நான் கிளைமேக்ஸ் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டார். அதன்பிறகு பேசி சரிதாவை டப்பிங் பேச வைத்தார்கள்” என தெரிவித்துள்ளார்.