அதுக்குன்னு இப்படியெல்லாம் ரிவ்யூவா? ப்ளூசட்டை மாறனை லெஃப்ட் ரைட் வாங்கிய நடிகர் ஆரி!!
நான் யாரையும் சூசகமாக குறிப்பிடவில்லை, புளூ சட்டை மாறனைதான் சொல்கிறேன். சினிமா தரமில்லாமல் இருக்குறது என்பதற்காகத்தான் ஒரு விமர்சனமே பண்றீங்க, ஆனா அதையே தரம் தாழ்ந்து பண்ணா என்ன அர்த்தம்.
புளூ சட்டை மாறன் விமர்சனம் செய்யும் போக்கை ஒரு படவிழா மேடையில் திட்டி தீர்த்திருக்கிறார் நடிகர் ஆரி. வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது. போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள வலிமை திரைப்படத்தில், அஜித்திற்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் இதனிடையே பல நெகட்டிவ் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அதில் குறிப்பாக புளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படும் ஒரு விமர்சகரின் யூட்யூப் விமர்சனம் வழக்கமாக அனைவராலும் பார்க்கப்படும் விமர்சனம் ஆகும். ஏன் என்றால் அவர் திட்டுவதை கேட்கவே பலர் அவரது விமர்சனங்களை பார்ப்பார்கள்.
அவர் வழக்கம்போல வலிமை திரைப்படத்தையும் கழுவி ஊற்றி இருந்தார். அஜித்தின் நடனத்தை கிண்டலடிப்பது, அவர் டயலாக் பேசுவதை கிண்டலடிப்பது என்று கிட்டத்தட்ட ட்ரோல் செய்திருந்தார். இவர் இதே போல விவேகம், அண்ணாத்த போன்ற அஜித் படங்களையும் இதே பாணியில் கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விமர்சன பாணியை முன்பிலிருந்தே திரைப்பட துறையினர் கண்டித்து வந்துள்ளனர். ஆனால் அவர் அதனை மாற்றிக்கொண்டதே இல்லை. தற்போது நடிகரும் பிக் பாஸ் பிரபலமும் ஆன ஆரி ஒரு திரைப்பட விழாவில் புளூ சட்டை மாறன் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசியுள்ளார்.
நடிகர் ஆரி பேசுகையில், "தாராளமாக குறையை சொல்லுங்கள், இது தவறு, அது தவறு என்று கூறுவதில் தவறில்லை, அதனை கேட்டு திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் 'இந்த படத்துக்கு போகாதீங்க'ன்ற ரெஞ்சுக்கு அந்த படத்தை அடிச்சு துவைக்காதீங்க. ஒரு படத்தை காலி பண்ற அளவுக்கு விமர்சனம் செய்யுறது இருக்குல்ல அதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஒவ்வொரு இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும், எவ்வளவு பேர் கை கால்ல விழுந்து இந்த இடத்துக்கு வந்துருக்காங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சும் அதை நீங்க செய்யக்கூடாது. மல்லாக்க படுத்து எச்சி துப்பினால் அது நம்ம மேல தான் விழும். நாம் சார்ந்த துறையில் எப்படி ஒரு விமர்சனத்தை வைக்கணுமோ அப்படி வைங்க. முன்மாதிரியாக ஒரு விமர்சனத்தை வைங்க. அதுல இருந்து கத்துப்பாங்க எல்லாரும். தரம் தாழ்ந்த விமர்சனங்களில் நம் முகம் தெரியும்ன்னு நான் பிக் பாஸ்ல சொன்னேன். அதே தான் உங்களுக்கும். நான் யாரையும் சூசகமாக குறிப்பிடவில்லை, புளூ சட்டை மாறனைதான் சொல்கிறேன். தயவு செய்து உங்களது விமர்சனங்களின் தரத்தை கூட்டிக்கொள்ளுங்கள். அப்போதுதான் சினிமாவின் தரம் உயரும். நீங்கள் சினிமா தரமில்லாமல் இருக்குறது என்பதற்காகத்தான் ஒரு விமர்சனமே பண்றீங்க, ஆனா அதையே தரம் தாழ்ந்து பண்ணா என்ன அர்த்தம். அஜித் சாரும் அவரது உழைப்பால் வந்தவர், கடின உழைப்பால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார், அவர் மீது இதுபோன்ற விமர்சனங்களை வைப்பது தவறு" என்று பேசினார்.