Vetrimaaran: என்னால் ஏத்துக்கவே முடியல.. வெற்றி துரைசாமியை நினைத்து கண்கலங்கிய வெற்றிமாறன்!
கடந்த 11 ஆண்டுகளாக நான் என்ன செய்தாலும் வெற்றியின் பங்களிப்பு எதோ ஒரு வகையில் இருக்கும். நான் வேண்டாம் என சொன்னாலும் மறுத்து என்னோட பங்களிப்பு வேண்டும் என சொல்வார்.
இயக்குநர் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கண்கலங்கியபடி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சென்னையின் முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமி இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும் இருந்து வந்தார். அதேசமயம் சினிமா மீதும் ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி என்றாவது ஒருநாள் என்ற படத்தை இயக்கியிருந்தார். தனது 2வது படம் தொடர்பான பணிகளுக்காக இமாச்சலபிரதேசம் சென்றிருந்த அவர் கார் விபத்தில் உயிரிழந்தார். கிட்டதட்ட 8 நாட்களுக்குப் பின் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கண்டெடுக்கப்பட்டது.
வெற்றி துரைசாமி உடல் சென்னைக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வெற்றி துரைசாமி தன்னை சினிமா சம்பந்தப்பட்ட இடங்களில் எங்கு அறிமுகம் செய்தாலும் வெற்றிமாறனின் மாணவன் தான் என சொல்வார். என்கிட்ட தான் சினிமா கற்றுக்கொண்டேன் என சொல்லுவார். ஆனால் உண்மையில் நான் தான் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டேன். எங்கள் இருவருக்குமான பொதுவான விருப்பங்கள் நிறைய உள்ளது. அது எல்லாவற்றை பற்றியும் தேடல் இருக்கும் மனிதர் வெற்றி துரைசாமி. அவர் வன விலங்கு புகைப்படக்காரரா நிறைய விருதுகளை வாங்கியிருக்காரு. எனக்கு தனிப்பட்ட முறையில கடந்த 11 ஆண்டுகளாக நான் என்ன செய்தாலும் வெற்றியின் பங்களிப்பு எதோ ஒரு வகையில் இருக்கும்.
நான் வேண்டாம் என சொன்னாலும் மறுத்து என்னோட பங்களிப்பு வேண்டும் என சொல்வார். அதனுடைய உச்சமாக தான் ஐஐஎஃப்சி என்ற திரைப்பட கல்லூரிக்கு இடம் கொடுத்தார். இதனை சாதாரணமாக செய்ய யாருக்கும் மனசு இருக்காது. அவர் அப்படி முன்வரவில்லை என்றால் இது உருவாகியிருக்க இன்னும் எத்தனை காலம் ஆகியிருக்கும் என தெரியாது. வெற்றி துரைசாமி தன் தந்தையைப் போல எப்போதும் எல்லாருக்கும் உதவி செய்ய பழக்கம் இருப்பதால் இப்படி செய்ய வைத்திருக்கும்.
அவர் எப்போதும் சிரித்துக் கொண்டு, அனைவரிடத்திலும் அன்பு காட்டக்கூடிய மனிதர். வெற்றியின் மறைவு யாராலும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பாக உள்ளது. ஆனால் காலம் அடிக்கடி இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் நிறுத்துகிறது. இந்த நேரத்தில் நாம் துணிச்சலாக எடுத்து வைக்கக்கூடிய நகர்வுகள் தான் நம்மை யாருன்னு டிசைன் பண்ணும் தருணமாக இருக்கும். வெற்றி துரைசாமி தன்னுடைய 2வது படத்துக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரின் நினைவாக ஐஐஎஃப்சி சார்பாக முதல் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களுக்கு விருது வழங்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர் வனவிலங்கு புகைப்படக்காரர்களுக்கு விருது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாழ்க்கையில் நாம நிறைய பேரை சந்திக்கிறோம். கடந்து போறோம், இழக்கிறோம். ஒரு சிலரின் மறைவு தான் நம்மில் சிலவற்றை எடுத்துச் செல்கிறது. அப்படி ஒருவர் தான் வெற்றி துரைசாமி” என கண்கலங்கிய படியே பேசினார்.