இயக்குநர் வசந்த் நமக்கு பிடிவாதமாக ஒன்றை உணர்த்துகிறார் - இயக்குநர் வெற்றிச்செல்வன் சிறப்பு பேட்டி
பல மாற்றங்கள் காலத்தில் நடந்தாலும் பெண்களுக்கு அது நடந்ததா என்றால் பெரும்பாலும் இல்லை. பெண் கதாபாத்திரங்களை எப்போதும் வசந்த் சார் மேம்போக்காக உருவாக்க மாட்டார் - இயக்குநர் வெற்றிச்செல்வன்
இயக்குநர் வசந்த் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர். கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய வசந்த் கேளடி கண்மணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தன்னுடைய முதல் படத்திலிருந்தே தன் முத்திரையை விடாமல் கோலிவுட்டில் பதித்துவரும் மிகச்சில இயக்குநர்களில் ஒருவர். அவர் எடுத்த ஆசை, அப்பு, ரிதம், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட்.
குறிப்பாக அவர் வடிவமைக்கும் பெண் கதாபாத்திரங்கள் தனித்துவம் வாய்ந்தவை. கதாநாயகி என்ற பெயருக்கு நியாயம் செய்யும் விதமாக நாயகிகளை சுற்றியும் கதையை வடிவமைப்பவர் வசந்த்.
அவர் தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தை இயக்கி முடித்துள்ளார். படம் ரசிகர்களிடம் விருதையும், பாராட்டையும் பெறும் முன்னதாகவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ஏராளமான விருதுகளை பெற்றுள்ளது.
தற்போது இந்தப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. மாநாடுக்கு ஒரு கூட்டம் போய்க்கொண்டிருந்தாலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களையும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்த சுழலில் இயக்குநர் வசந்த்திடம் சத்தம் போடாதே, மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக இருந்தவரும், தற்போது ஜெய் மற்றும் அதுல்யாவை வைத்து எண்ணித்துணிக என்ற படத்தை இயக்கி முடித்திருப்பவருமான இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் குறித்து ஏபிபி நாடு செய்திகளிடம் பேசினார்.
படம் குறித்து அவர் பேசுகையில், “வசந்த் சாருடைய முதல் படத்திலேயே புதுமையும் இளமையும் இருந்தது. அவருடைய இயக்கமே புதிதாக இருக்கும்.
யாரும் யோசிக்காத காட்சிகள், ஒரே ஷாட்டில் கதை சொல்வது, ஒளிப்பதிவு குறித்த அவரது புரிதல், கதாபாத்திரங்களின் டயலாக் டெலிவிரி, ஆர்ட்டிஸ்ட்டுகளின் உடல்மொழி என அனைத்தும் அவருடைய படங்களில் தனித்துவமாக இருக்கும்.
இதை அவர் தனது முதல் படத்திலேயே நிரூபித்திருப்பார். சிறு வயதிலேயே அவர் இயக்குநராக அறிமுகமானவர். ஆனால் அனைவரும் ரஜினி, கமலை தேடி ஓடிக்கொண்டிருக்கையில் முதல் படத்தில் எஸ்பிபியை வைத்து வென்று காட்டினார். எத்தனையோ நடிகர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். நடிகர்களை அறிமுகப்படுத்துவது சாதாரண விஷயமில்லை.
திடீரென ஒருவரை கேமரா முன் நிறுத்தி அவரை ஸ்டாராக மாற்றுவது எளிதான விஷயமில்லை. அவர் அதை எளிதாக செய்தார். அப்படித்தான் சூர்யா, சிம்ரன் போன்றோரை உருவாக்கினார். அஜித்திற்கு முதல் ஹிட் வந்ததே ஆசை படத்தில்தானே என்றார் தன் குருநாதர் குறித்த பூரிப்பு அடங்காமல்.
அந்த பூரிப்புடன் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் குறித்த பேச்சை ஆரம்பித்த வெற்றிச்செல்வன், “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கான ப்ரீமியர் ஷோவுக்கு வசந்த் சார் அழைத்திருந்தார். சென்றிருந்தேன்.
அந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்து A Vasanth sai Film என்று வரும்வரை படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமும், கதாபாத்திரமும், காட்சியமைப்பும் ஒரு இயக்குநராக என்னை ஆச்சரியப்படுத்தியது.
நாம் யோசிக்கும் கோணத்தில் அவர் எதையுமே யோசிப்பதில்லை என்பதை இத்தனை ஆண்டுகள் கழித்தும் பிடிவாதமாக நமக்கு உணர்த்துகிறார். மிகப்பெரிய எமோஷன்களை சிங்கிள் ஷாட்டில் சொல்வது மிகப்பெரிய கஷ்டம். ஆனால் அதை வசந்த் சார் இதில் செய்திருக்கிறார். அது என்னை பிரமிக்க வைத்தது.
நம் அன்றாட வாழ்க்கையில் அம்மா, அக்கா, தங்கை, மனைவி என அனைவரையும் நாம் கவனித்திருப்போம். ஆனால் இந்தப் படத்தை பார்த்தால் இன்னும் கூடுதலாக அவர்களை நம் கண்கள் கவனித்து நம் எண்ணங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
பல மாற்றங்கள் காலத்தில் நடந்தாலும் பெண்களுக்கு அது நடந்ததா என்றால் பெரும்பாலும் இல்லை. பெண் கதாபாத்திரங்களை எப்போதும் மேம்போக்காக உருவாக்க மாட்டார். அந்தக் கதாபாத்திரங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பார். பெண் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் அவரின் தாக்கம்தான் நான் கதை எழுதும்போதும் இருக்கிறது.
அவருடைய குருநாதர் பாலச்சந்தரிடம் இருந்து எப்படி சில விஷயங்களை அவர் எடுத்துக்கொண்டாரோ அப்படி நான் அவரிடம் இருந்து எடுத்துக்கொண்ட விஷயங்களில் முக்கியமானது, பெண் கதாபாத்திரங்களை சாதாரணமாக வடிவமைத்திட கூடாது. ஏனென்றால் பெண்கள் சாதாரணமானவர்கள் கிடையாது என்பது.
படத்தில் வரும் ஒரு பெண் தன்னுடைய குடும்பத்துக்காக தொலைத்த அவளுடைய கனவுகளை, லட்சியங்களை சிங்கிள் ஷாட்டில் ரசிகர்களுக்கு வசந்த் சார் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். அதை பார்க்கும்போது திரையரங்குகளில் இருந்த அத்தனை கண்களும் கலங்கின.
பெண்களை மையப்படுத்தி படங்கள் வந்திருந்தாலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தை பார்த்தால் வீடு, அலுவலகம், பூங்கா, சாலை, மால்கள் என எங்கு பெண்களை பார்த்தாலும் அவர்கள் மீது நிச்சயம் மரியாதை வரும். அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியே. இதுபோன்ற படங்கள் நிச்சயம் பெரிய அளவில் வெல்ல வேண்டும். அப்போதுதான் சினிமா மேலும் ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்