“நியாயமாக பார்த்தால் நான்தான் காசு கொடுக்கணும்” - டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை பாராட்டிய மம்பட்டியான்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இடம்பெற்ற மம்பட்டியான் பாடலுக்கு பலரும் வழக்கு தொடர சொன்னதாக இயக்குநர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஆச்சர்யம்.

தற்போது வெளியாகும் தமிழ் படங்களில் 90களில் வெளியான ஹிட்டான பாடல்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் ஆசை அதிகம் வைத்து பாடல் இடம்பிடித்து மிகப்பெரிய சென்ஷேனல் ஹிட்டாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய விக்ரம் படத்தில் மன்சூர் அலிகான் நடனம் ஆடிய பாடல் ஒன்றை வைத்திருந்தார். அதேபோன்று லியோ படத்தில் கரு கரு கருப்பாயி பாடலுக்கு விஜய்யை நடனம் ஆட வைத்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. அதேபோன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன் பாடல் இடம்பெற்றன.
காப்பிரைட்ஸ் விவகாரம்
குட் பேட் அக்லி படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரனும் இளையராஜாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். சமீபகாலமாக தனது அனுமதி இல்லாமல் படத்தில் பாடல்களை பயன்படுத்துவதாக இளையராஜா இளம் இசையமைப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ரூ.7 கோடி சம்பளம் பெறும் இசையமைப்பாளர் சிறந்த பாடலை தரமுடியவில்லையா என்றும் கங்கை அமரன் ஆதங்கத்துடன் பேசினார்.
தயாரிப்பாளர் தேனப்பன் பதிலடி
குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற பாடல் விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன், சமீபத்தில் கங்கை அமரன் பேசியதை கேட்டேன். ஜி.வி.பிரகாஷ் ரூ.7 கோடி வாங்குவது இவருக்கு வயிற்றெரிச்சலா என்று தெரியவில்லை. இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் சிம்ரன் ஆடும் காட்சியில் எம்.எஸ்.வி அவர்களது பாடலை பயன்படுத்தி இருப்பார்கள். அதற்காக இளையராஜாவுக்கு வேலை தெரியாது என்று சொல்ல முடியுமா? என தேனப்பன் பேசியிருந்தார்.
பணம் வேண்டாம்
தமிழ் சினிமாவில் காப்பிரைட்ஸ் விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது வெளியாகும் படங்களில் எனது பாடல்கள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என இசையமைப்பாளர் தேவா தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இளையராஜா மட்டும் ஏன் கேட்கிறார் என்ற கேள்வியையும் கேட்டிருந்தனர். அதே நேரத்தில் அவரிடம் அனுமதி பெற்று பாடல்களை வைக்கும் இயக்குநர்களிடம் அவர் பணம் கேட்பதில்லை என்று தமிழ் படத்தை இயக்கிய இயக்குநர் அமுதன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு வாழ்த்துகள்
இந்நிலையில், கடந்த மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பிரசாந்த் நடித்த மம்பட்டியான் பட பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் வைப் மோடை கிரியேட் செய்திருந்தது. படத்தின் காட்சிக்கு ஏற்றார் போல் ரசிகர்களையும் கவர்ந்தது. தமிழ் சினிமாவில் சிறந்த படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தில் மம்பட்டியான் பாடல் இடம்பெற்றது குறித்து பேசிய மம்பட்டியான் இயக்குநர் தியாகராஜன், “என் படத்தின் பாடலை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு என் வாழ்த்துகள். இதற்காக யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை. நிறைய பேர் என்னிடம் வந்து இதை கண்டித்து வழக்கு தொடர சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். என் பட பாடல் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவியதற்கு சந்தோஷப்படுகிறேன். பணம் பார்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை. நியாயமாக பார்த்தால் நான்தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். நான் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார்.



















