Mohan G: எந்த சாதியா இருந்தாலும், பெத்தவங்க ஒத்துக்கணும்.. காதல் திருமணம் பற்றி இயக்குநர் மோகன் ஜி..
கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண் இரண்டே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எந்த சாதியாக இருந்தாலும் காதலில் பெற்றோரின் ஒப்புதல் முக்கியம் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண் இரண்டே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த மீனா என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் மன்னாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மகிழ்ச்சியாகவே இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் திருமணத்துக்குப் பின் மீனா வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும், யுவராஜ் வீட்டில் பலவித டார்ச்சருக்கு ஆளானதாகவும், மீனா சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது சகோதரிகள் கண்ணீர் மல்க ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது “போலீசார் யுவராஜை காப்பாற்ற முயற்சிப்பதாகவும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்” என குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ ஒன்றை குறிப்பிட்டு எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட இயக்குநர் மோகன் ஜி, “எம்மா.. உனக்கு அவ்வளவு சீக்கிரம் நியாயம் எல்லாம் கிடைக்காதுமா. அந்த தம்பிக்கு எதாவது ஒரு அரசியல் கட்சி பாராட்டு விழா நடத்தும். பெரிய பொறுப்பு தருவாங்க.. இதை சொன்னதுக்கு இப்ப என்னையே திட்டுவாங்க.. நாட்டுல இந்த மாதிரி பிரச்சினைகளை சமாளிக்க ஒரு அமைப்பு ஆரம்பிக்க வேண்டும் விரைவில்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்த இணையவாசி ஒருவர், “நாங்க வேற சாதி அவங்க வேற சாதி என்று பெண்ணின் அக்கா பதிவு பண்ணுறாங்க அப்போ அந்த பையன் சாதி என்று முதலில் தெரிந்து கொண்டு பிறகு பதிவு போடு வெளிப்படையாக அது தான் நியாயம் அதுவும் இல்லாம தமிழ்நாட்டில் சாதி வெறியன் கள் என்று ஒரு சில கட்சியை தான் சொல்லுவாங்க அது உனக்கும் தெரியுமே” என கூறினார். இதனை குறிப்பிட்டு பதிலளித்த இயக்குநர் மோகன் ஜி, “எப்பவுமே எந்த சாதி காதலில் பிரச்சனைக்குரியது என்று நான் குறிப்பிட்டு சொன்னது இல்லை.. ஆனால் முண்டியடித்து ஆஜராகி தானாக சிக்கி கொள்பவர்கள் நீங்கள்.. எந்த சாதியாக இருந்தாலும் பெற்றோர் ஒருவரது ஒப்புதலாவது முக்கியம்.. ஓரமா நின்னு வேடிக்கை பாரு தம்பி” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.