சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ்...சத்தமில்லாமல் ஒதுங்கிய மோகன் ஜி
திருநங்கைகள் குறித்த அநாகரிகமான கருத்து தொடர்பாக இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்த நிலையில் மோகன் ஜி இதுவரை எந்த பதிலும் தரவில்லை

டோரதி படத்தை ஒட்டிய தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் இயக்குநர் மோகன் ஜி திருநங்கைகள் குறித்து பேசிய கருத்து பரவலாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் டோரதி படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மோகன் ஜியின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். கார்த்திக் சுப்பராஜின் கண்டனத்தை ஆதரித்து பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். பொதுவாக தன் மீதான விமர்சனங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்றும் இயக்குநர் மோகன் ஜி இந்த விஷயத்தில் இதுவரை மெளனம் காத்து வருகிறார்.
டோரதி சர்ச்சை பின்னணி
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி டோரதி படம் வெளியானது. திருநங்கைகள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ், ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தங்கள் வலிகளை சொல்ல ஒரு படம் வந்துள்ளதாக மூன்றாம் பாலினத்தவர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இப்படியான நிலையில் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குநர் மோகன் ஜி டோரதி படம் பற்றி ஊடக விவாதத்தில் திருநங்கைகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு வீடியோ வெளியிட்டு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டோரதி படம் திருநங்கையை சமமான மனிதர்களாக பார்க்க வேண்டும் என சொல்கிறது. ஆனால் அதையும் மீறி ஒரு பொது தளத்தில் திருநங்கை மீதான் வன்மத்தை, வெறுப்புணர்வுடன் கருத்துகளை பரப்புவது உளவியல் ரீதியான வன்முறையாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் டோரதி படத்தை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். கண்டுக்கொள்ள மாட்டேன். ஆனால் மனிதாபிமானம் ஒன்று உள்ளது.
திருமணம் செய்து உடலுறவு வைத்து குழந்தைப் பெற்றுக் கொள்வது தான் வாழ்க்கையோட இலக்காக இருக்கிறதா?.. விலங்குகள் கூட அதை செய்கிறதே?.. சாதாரண மனிதர்களாக இருப்பவர்களால் கூட குழந்தை பெற முடியாமல் போகிறது. அவர்கள் வாழ தகுதி இல்லாமல் ஆகி விடுவார்களா?.. பாலியல் பாகுபாடு காட்டி ஒருவரை பேசி உளவியல் ரீதியான தாக்குதல் நடத்துவது தவறானது. அதை இனிமேல் பண்ணாதீர்கள். இப்படி பேசும் அளவுக்கு சமூகம் இருப்பதற்கு வருத்தமாக உள்ளது” என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















