திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
டோரதி படம் திருநங்கையை சமமான மனிதர்களாக பார்க்க வேண்டும் என சொல்கிறது. ஆனால் அதையும் மீறி ஒரு பொது தளத்தில் திருநங்கை மீதான் வன்மத்தை, வெறுப்புணர்வுடன் கருத்துகளை பரப்புவது வன்முறையாகும்.

திருநங்கைகள் வாழ்க்கைப் பற்றி அநாகரிகமான கருத்துகளை சொன்ன இயக்குநர் மோகன் ஜிக்கு , இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி டோரதி படம் வெளியானது. திருநங்கைகள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ், ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தங்கள் வலிகளை சொல்ல ஒரு படம் வந்துள்ளதாக மூன்றாம் பாலினத்தவர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இப்படியான நிலையில் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குநர் மோகன் ஜி டோரதி படம் பற்றி ஊடக விவாதத்தில் திருநங்கைகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு வீடியோ வெளியிட்டு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
I Strongly Condemn.... https://t.co/u8n6StgXpg
— karthik subbaraj (@karthiksubbaraj) October 13, 2026
விமர்சனங்களை கண்டுக்கொள்ளவில்லை.
அந்த வீடியோவில், “டோரதி படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்த உங்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெளியாகி 20 நாட்கள் ஆகப் போகிறது. நான் ஒவ்வொரு தியேட்டராக சென்று மக்களின் வரவேற்பைப் பார்த்தேன். சில பேர் படத்துடன் ரொம்ப உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆகி இருந்தார்கள். இதனால் சிறிய மாற்றம் அவர்களிடத்தில் தெரிந்தது. இதனைக் கண்டு நான் சந்தோசமாக இருந்தேன். அதேசமயம் இந்த படம் ரிலீசுக்கு முன், பின் ஒரு குறிப்பிட்ட க்ரூப் குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்பினார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்தகையவர்களுக்கு திருநங்கையை மையப்படுத்திய ஒரு கதையை வெற்றியடைய வைத்து விடக்கூடாது என்பதில் ஆர்வமாகவும், தெளிவாகவும் இருந்தார்கள். அதையும் மீறி டோரதி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விட்டது.
இயக்குநர் மோகன் ஜிக்கு கண்டனம்
இப்படியான நிலையில் என் குழுவைச் சேர்ந்த ஒருவர் வீடியோ ஒன்றை என்னிடம் காட்டினார். அதில் இயக்குநர் மோகன் ஜி டோரதி படம் பற்றிய ஊடக விவாதம் ஒன்றில் பங்கேற்றார். அந்த விவாதத்தில் நேகா என்ற திருநங்கையும் பங்கேற்றார். அதில் ஒரு கேள்வியை நேஹாவிடம் மோகன் ஜி முன்வைத்தார். அதாவது திருமணம் செய்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்க, அதற்கு நேஹா, ஒரு பையன் திருநங்கையை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்வாங்க, இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என தெளிவாக பதில் சொன்னார்.
மோகன் ஜி திரும்ப திரும்ப சந்தோசம் என்றால் எதை சொல்றீங்க என்ற கேள்வியை வைத்து அழுத்தம் கொடுக்கிறார். அதாவது உங்களால் உடலுறவு வைத்து இயற்கையாக குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்ற இடத்தில் தான் அந்த கேள்வி முடிவடைகிறது. இதை கேள்வி என்று சொல்வதை விட அவமரியாதை என சொல்லலாம். இதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு விஷயம் புரிகிறது.
பாலியல் பாகுபாடு காட்ட வேண்டாம்
டோரதி படம் திருநங்கையை சமமான மனிதர்களாக பார்க்க வேண்டும் என சொல்கிறது. ஆனால் அதையும் மீறி ஒரு பொது தளத்தில் திருநங்கை மீதான் வன்மத்தை, வெறுப்புணர்வுடன் கருத்துகளை பரப்புவது உளவியல் ரீதியான வன்முறையாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் டோரதி படத்தை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். கண்டுக்கொள்ள மாட்டேன். ஆனால் மனிதாபிமானம் ஒன்று உள்ளது.
திருமணம் செய்து உடலுறவு வைத்து குழந்தைப் பெற்றுக் கொள்வது தான் வாழ்க்கையோட இலக்காக இருக்கிறதா?.. விலங்குகள் கூட அதை செய்கிறதே?.. சாதாரண மனிதர்களாக இருப்பவர்களால் கூட குழந்தை பெற முடியாமல் போகிறது. அவர்கள் வாழ தகுதி இல்லாமல் ஆகி விடுவார்களா?.. பாலியல் பாகுபாடு காட்டி ஒருவரை பேசி உளவியல் ரீதியான தாக்குதல் நடத்துவது தவறானது. அதை இனிமேல் பண்ணாதீர்கள். இப்படி பேசும் அளவுக்கு சமூகம் இருப்பதற்கு வருத்தமாக உள்ளது” என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















