Cinema Headlines :பிடிபட்ட தமிழ் ராக்கர்ஸ் அட்மின்..தக் லைஃப் டப்பிங் முடித்த சிம்பு...சினிமா செய்திகள் இன்று
July 28 Cinema Headlines : தனுஷின் ராயன் பாக்ஸ் ஆபிஸ் முதல் தக் லைஃப் சிம்பு வரை இன்று வெளியான சினிமா செய்திகளைப் பார்க்கலாம்
போலீஸிடம் சிக்கிய தமிழ்ராக்கர்ஸ் அட்மின்
நடிகர் ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா பிருத்விராஜ் அளித்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ஸ்டீபன் ராஜை கொச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் மூலம் சட்ட விரோதமாக திரைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதன் மூலம் சினிமா முதலீட்டாளர்கள் முதல் நடிகர்கள் வரை பாதிப்படைந்து வருவதால், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த குருவாயூர் அம்பல நடையில் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் பிரித்விராஜின் மனைவி புகார் அளித்தார்.
இந்த நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்து சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராயன் 2 நாள் வசூல்
தனுஷ் நடித்த ராயன் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நடிகர் தனுஷ் தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் ரசிகர்கள் ராயன் படத்திற்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகிறார்கள். ராயன் படம் முதல் நாளில் இந்தியளவில் 13 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளாக 13.7 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு
நடிகர் சிலம்ரசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசன் , அசோக் செல்வன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி , த்ரிஷா , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. சில சண்டை காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டப்பிங் பணிகளும் தீவிரம் அடைந்து வருகிறது. நடிகர் சிம்பு இப்படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
டப்பிங் பணிகளில் சிம்பு ஈடுபட்டுள்ள புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இப்படத்தை முடித்த பிறகு எஸ்டிஆர் 48 படத்தின் பணிகளை தொடங்குவார் சிம்பு என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
டாக்டர் டூம் ஆக மாறிய அயர்ன் மேன்
மார்வெல் ஸ்டுடியோஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதன்படி, ராபட் டவுனி ஜூனியர் மீண்டும் அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், ஆனால் அயர்ன் - மேன் கதாபாத்திரமாக இன்றி டாக்டர் டூம்(Doctor Doom) எனப்படும் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை சந்தோஷத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. 2026 ம் ஆண்டு மே மாதம் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே(Avengers Doomsday) திரைப்படமும், 2027ம் ஆண்டு மே மாதம் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ்(Avengers Secret Wars) என இரண்டு பாகமாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.