Rohini Theatre: பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவ பெண்கள்.. உள்ளே விட மறுத்த ரோகிணி தியேட்டர்: குவியும் கண்டனம்
பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்களை சென்னை ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் உள்ளே விட மறுத்த சம்பவம் இணையத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்களை சென்னை ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் உள்ளே விட மறுத்த சம்பவம் இணையத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
நடிகர்கள் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படம் தமிழ்நாடு முழுவதும் இன்று வெளியானது. இந்த படத்துக்கு அதிகாலை 5 மணி காட்சி இல்லை என்ற நிலையில், 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால் நள்ளிரவு முதலே தியேட்டர்களில் சிம்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். பேனர்கள், தோரணங்கள், டிஜே மியூசிக் என தியேட்டர் வளாகமே ரசிகர்களால் களைக்கட்டியது.
முன்னதாக பத்து தல படத்திற்காக முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்த நிலையில், சென்னை ரோகிணி தியேட்டரும் வழக்கம் போல கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. இதனிடையே அங்கு டிக்கெட்டுகளை சரிபார்த்து ஊழியர்கள் ரசிகர்களை உள்ளே அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் டிக்கெட் இருந்த நிலையில் அவர்களை ஊழியர்கள் உள்ளே விட மறுத்துள்ளனர்.
அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது. https://t.co/IjGBzxLkJT
— G.V.Prakash Kumar (@gvprakash) March 30, 2023
இதனைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில் இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. பலரும் ஊழியர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில், சென்னை ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தை தொடர்புக் கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “அந்த பெண்களை படம் பார்க்க அனுமதித்து விட்டதாகவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என காட்டமாக தெரிவித்துள்ளார்.