Aryan Khan | அதிர்ச்சியளிக்கும் போதைப்பொருள் என கூறிய அதிகாரி.. கதறி அழுத ஷாருக்கான் மகன்! என்ன நடக்கிறது?
13 கிராம் கொக்கைய்ன், 21 கிராம் சராஸ், 5 கிராம் எம்டி, 22 எம்டிஎம்ஏ மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சினிமா நட்சத்திரங்கள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்குவது இந்தியத் திரையுலகில் ஒன்றும் புதியதல்ல. அண்மையில் கூட தெலுங்குத் திரைத்துறையில் 59கிராம் கஞ்சா வைத்திருந்த வழக்கில் நடிகைகள் சார்மி கவுர் உட்பட பல முன்னனி தெலுங்குத் திரை நட்சத்திரங்கள் சிக்கினர். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் இடம்பிடித்துள்ளது. பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரின் மகன் உட்பட ஏழு பேர் மும்பையின் நட்சத்திரக் கப்பல் கொண்டாட்டம் ஒன்றில் போதைப்பொருள் உபயோகிக்கும்போது பிடிபட்ட தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 கிராம் கொக்கைய்ன், 21 கிராம் சராஸ், 5 கிராம் எம்டி, 22 எம்டிஎம்ஏ மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆர்யன் கான்
என்ன நடந்தது?
மும்பையின் பிரபல சொகுசுக் கப்பல் ஒன்றில் நடந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகிக்கும்போது பிடிபட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப்பிரிவும் கடலோரக் காவல்படையும் இணைந்து நடத்திய இந்த பெரும் தேடுதல் வேட்டையில் ஆர்யன் கான் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சொகுசுக்கப்பல் கொண்டாட்டம் ஒன்றில் போதைப்பொருள் உபயோகிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து கப்பலுக்குள் மஃப்டியில் நுழைந்த போலீசாரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் போதைப்பொருள் உபயோகிக்கும் கும்பலை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களில் 23 வயது ஆர்யன் கானும் ஒருவர். அவருடன் அர்பாஸ் மெர்சண்ட், கோமித் சோப்ரா, நூபுர், முன்முன் தமேச்சா, இஸ்மித் சிங் ஆகியோரும் பிடிபட்டனர். பிடிபட்டவர்கள் தங்களது உடை, பர்ஸ் ஆகியவற்றில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கோவா செல்ல இருந்த அந்தக் கப்பலில் ஞாயிறு காலை 10 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை தேடுதல் வேட்டை நடந்துள்ளது. இவர்களில் ஆர்யன் கானின் அலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது அலைபேசியில் போதைப்பொருள் உபயோகம் தொடர்பான செய்திப் பரிமாற்றங்கள் இருந்ததாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
ஆர்யன் கானிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் அவர் கடந்த 4 வருடங்களாக போதைப்பொருள் எடுத்துவருவதாகவும் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையின் போது அவர் தொடர்ச்சியாக அழுததாகவும் கூறப்படுகிறது. விசாரணையை அடுத்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஆர்யன் கான். வருகின்ற 11 அக்டோபர் வரை அவரை சிறையில் விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் ஆர்யனுக்கு ஜாமீன் கேட்ட அவரது வழக்கறிஞர் சதீஷ் மனிஷ் ஷிண்டே ஆர்யன்கான் அனுமதிச்சீட்டு இருந்தும் தங்குவதற்கு இடமில்லாமல்தான் கப்பலில் பயணித்தார் என்றும் பிடிபட்டபோது அவரிடம் எந்த போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை என்றும் வெறும் மொபைல் குறுஞ்செய்தி பரிமாற்றத்தை வைத்து அவரை விசாரணைக்கு உட்படுத்துவது தவறு என்கிற அடிப்படையிலும் ஜாமீன் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also read: சிக்கிய ஷாருக்கான் மகன்..போதைப் பார்ட்டியால் அலறும் பாலிவுட்